செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது இலங்கை!

இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது இலங்கை!

3 minutes read
இலங்கை இன்று (26)) பரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை எட்டியதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

இந்த இணக்கப்பாடுகளுடன், இலங்கை தனது முக்கிய உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்களுக்கான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கின. ஆஸ்திரேலியா, ஒஸ்டிரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜேர்மனி, ஹொங்கேரியா, கொரியா, நெதர்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இருந்தன.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் சீனா எக்ஸிம் வங்கி மூலம் மறுசீரமைக்கப்பட வேண்டிய கடனின் ஒருங்கிணைந்த மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை அந்நிய செலாவணிக் கையிருப்பை இழந்தது. இதனால் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தது.

இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டது. கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடுகளுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்துக்கு முடியாது என்பதால் இலங்கை தனது அரச கடன் மறுசீரமைக்கும் செயற்பாட்டை ஆரம்பித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு ஆரம்பத்தில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் கடன் நிவாரண அளவு தீர்மானிக்கப்படுகின்றது.

அதன் பின்னர், இந்த  கடன் வழங்குநர்கள் மற்றும் கடனில் உள்ள நாடும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு மூலம் காட்டப்படும் இலக்கை அடையத் தேவையான பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக கடன் மறுசீரமைப்புப் பேச்சுகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுத்தது.

சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் நிவாரணம் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும்.

கடன் வழங்கும் நாடுகள் வெவ்வேறு வழிகளில் கடன் நிவாரணம் வழங்குகின்றன. உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி போன்ற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் இவற்றை வெவ்வேறாக தீர்மானிக்கின்றன.

காலத்தை நீடித்தல், விதிமுறைகளை தளர்த்துதல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்க கணிசமான கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பொருளாதாரம் மீளவும் வழமைக்கு திரும்பும் வரையில் எதிர்காலத்தில் கடன் சேவைத் திறன் மேம்படும் வரை குறுகிய காலத்தில் இலங்கைக்கான தற்போதைய கட்டணச் சுமையை இது குறைக்கும்.

இதை மதிப்பிடுவதற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் ஊடாக ஐஎம்எப் உடனான நிகழ்ச்சி நிரல் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், செலுத்த வேண்டிய குறித்த கடனில் நிவாரணம் வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு கடன் வழங்குநருடனும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும்போது ஐ.எம்.எப். கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். அத்துடன், ஏனைய கடன் வழங்குநர்களுடன் எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுடன் ஒப்பிடப்படும் வகையில் இது இருக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களுடனான இறுதிக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்டுவதை இலங்கை துரிதப்படுத்தும். முறையான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பது இந்த செயல்முறையை எளிதாக்கும்.

இன்று எட்டப்பட்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் பின்வரும் நன்மைகளை உள்ளடக்கியது.

1. நிதி நிவாரணம்:

இலங்கையின் வரி வருவாயை கடனை செலுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொதுச்சேவைகளுக்குப்  பயன்படுத்த முடியும். இது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கால அவகாசத்தை வழங்குகின்றது.

2. வெளிநாட்டு நிதி:

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இருதரப்பு நிதியுதவி வசதிகளைப் பெறுவதை மீண்டும் தொடங்கலாம். வரவு – செலவுத் திட்டத்தின் மூலதன செலவினங்களை ஆதரிக்க குறுகிய கால வெளிநாட்டு நிதி கிடைப்பதில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இது நிர்மாணத்துறை போன்ற துறைகளில் சாதகமான விளைவுகளையும், முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நடுத்தர முதல் நீண்ட கால சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

3. கடன் தரப்படுத்தல்:

இலங்கையின் கடன் தரப்படுத்தலை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவு அமையும். வர்த்தக பிணைமுறி உரிமையாளர்களின் கடன்களும் விரைவாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர், அது கடன் தரப்படுத்தலின் உயர்வுக்கு வழிவகுக்கின்றது.

உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவானது வெளிநாட்டு நிதியுதவிக்கான எளிதான பிரவேசம் என்பதுடன் குறைந்த செலவு போன்ற வழிகளின் ஊடாக குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். இது வர்த்தக நிதியிலிருந்து வங்கிகளுக்கு இடையேயான நிதியுதவி வரை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More