செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையில் கொளுந்து பறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? – மனோ கேள்வி

மலையில் கொளுந்து பறிக்கும் பெண்களுக்கு நற்செய்தி எப்போது? – மனோ கேள்வி

2 minutes read

“இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெற்றோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீளச் செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கின்றேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால், அந்தத் தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக கொழும்பு அவிசாவளை முதல் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா வரை தேயிலை மலைகளில் நாள் முழுக்க பாடு படும் எங்க குல பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வரப் போகின்றது?” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மும்மடங்கு அதிகரித்தமையால், அந்நாட்டிடம் இருந்து இலங்கை கடனுக்கு வாங்கிய பெற்றோலுக்காகச் செலுத்த வேண்டிய தொகையில் 60 மில்லியன் டொலரை மீளச் செலுத்த முடிந்தமை குறித்து மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-

“இது ஈரானுக்கு மட்டும் அல்ல. உலகின் பல நாடுகளிடம் இருந்து நாம் வாங்கிய கடன்களுக்கும் பொருந்தும். பல காலமாகவே பொருந்தும். 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, இலங்கை ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகம் அந்நிய செலாவணி, அதுவும் ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பை கொண்ட நாடாக இருந்தது. இது பற்றி ஜனாதிபதி மிகப் பெருமையாக நாடாளுமன்றத்தில் வந்து சொன்னார்.

அந்த ஸ்டேர்லிங் பவுண்ட்சில் திறைசேரி இருப்பு முழுக்க முழுக்க எங்கள் உழைப்பால் பெறப்பட்டது. இது உண்மை. இது எப்படி? அன்று இலங்கையில் பெருந்தோட்டத் தொழில் துறையைத் தவிர, பெயருக்கு கூட வேறு ஏற்றுமதி தொழில் துறைகள் இருக்கவில்லை. ஆகவே, அன்று முதல் இன்றுவரை கொழும்பு அவிசாவளை தொடக்கம் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, பதுளை, நுவரேலியா மலைகளில் நாள் முழுக்க எங்கள் பெண்கள்தான் பாடுபடுகிறார்கள்.

1948ஆம் முதல் நமது மக்களின் உழைப்பை கொண்டு பெற்ற அந்நிய செலாவணி இருப்பை வைத்து தான், மாறி மாறி வந்த இலங்கை அரசு தலைவர்கள் தாராளமாக ஆட்டம் போட்டார்கள். தமது வாக்காள மக்களுக்கு கையை வீசி, இலவசமாக அள்ளி, அள்ளி வழங்கி வாக்குகளைப் பெற்றார்கள். அந்த அரசுகளில் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்த பிற்போக்கு பேர்வழிகளும், நமது மக்களை விற்று, சாப்பிட்டு, ஆட்டம் போட்டார்கள்.

இனியாவது மலையகப் பிற்போக்கு அரசியல்வாதிகள், கோமாளிக் கூத்துகளையும், வாய் சவடால்களையும் நிறுத்தி விட்டு, இலங்கை சரித்திரத்தை, பொருளாதார வரலாறுகளைக் கற்றறிந்து, எமது மக்களின் உரிமைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டும். இந்த நோக்கில் தமிழ் முற்போக்குக் கூட்டணி எவருடனும் கரம் கோர்த்துச் செயற்படத் தயார்.

இன்று நாம் முற்போக்குக் கூட்டணியினராக அரசுக்கு எடுத்துரைக்கின்றோம். இனியும் எங்கள் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது. எங்கள் உழைப்பால் வரும் வாழ்வு உங்களுக்கு மட்டும்! சாவு மட்டும் எங்களுக்கா? நான் ஒரு இலங்கையன், இதனால், நான் எப்போதும் பெருமையடைகின்றேன். இது பல வருடங்களாக நான் உரக்கக் கூறி வரும் எனது கொள்கை. ஆனால், எனது மக்களை அடகு வைத்து, அதன் மூலம் எனக்கு நாட்டுப் பற்று வேண்டாம் என்பதும் எனது கொள்கை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More