புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமே கறுப்பு ஜூலை”

“இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமே கறுப்பு ஜூலை”

1 minutes read

“இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக கறுப்பு ஜூலை விளங்குகின்றது. மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் தமிழ்ச் சமூகத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் எனக் கனடா தொடர்ந்தும் வலியுறுத்தும்.”

– இவ்வாறு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41 ஆம் ஆண்டைக் குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கனேடியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“41 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின.

ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் இழக்கப்பட்டன. மேலும் பல தமிழர்கள் காயமடைந்தனர். கொடூர வன்முறைகளுக்கு இலக்கானவர்கள், நாட்டிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

கறுப்பு ஜூலையானது தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம், பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் தசாப்தகால ஆயுத மோதலாகப் பரிணமித்தது.

இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக கறுப்பு ஜூலை விளங்குகின்றது.

மே மாதம் 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை கனடாவின் நாடாளுமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.

இந்த அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில் கனடாவின் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகத்தினருடன் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதற்கான கனடாவின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது.

மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் தமிழ்ச் சமூகத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும்  வேண்டுகோள் விடுக்கும்.

கறுப்பு ஜூலையின் பின்னர் அதிகளவான தமிழர்கள் கனடாவுக்கு வந்தார்கள். அவர்களுக்குக் கனடா பல வழிகளிலும் உதவியது.

உலகில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் தற்போது கனடாவிலேயே வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் எங்கள் சமூகத்துக்கு வழங்குகின்ற பங்களிப்பை நாங்கள் கொண்டாடுகின்றோம். நாங்கள் எப்போதும் அவர்களைப் பாதுகாப்போம்.

கறுப்பு ஜூலையில் துயரத்தைச் சந்தித்த – அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதில் நான் கனடாவின் பிரஜைகளுடன் இணைந்துகொள்கின்றேன்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More