கம்பஹா மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜா – எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என்றும், அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா, தம்மிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் உடுகம்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.