நல்லாட்சி அரசின் காலத்தில் முழு நாடாளுமன்றமுமே அரசமைப்புப் பேரவையாக மாறி உருவாக்கிய புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து ஆராயலாம் என்ற யோசனைத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியிடம் நேரில் தெரிவித்தார்.
இன்று முற்பகல் கொழும்பில் சுமந்திரனின் இல்லத்தில் அவரைக் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவும், கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசமும் நேரில் சென்று சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் நீடித்தது.
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்ற முறையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத்தினருடன் தாம் நேரில் பேச விரும்புகின்றார் என்று இந்தச் சந்திப்பின்போது நாமல் எம்.பி., சுமந்திரனிடம் தெரிவித்தார் என அறியவந்தது.
”நாளை ஞாயிற்றுக்கிழமை எங்கள் கட்சியின் மத்திய குழு வவுனியாவில் கூடவிருக்கின்றது. அதில் உங்களின் (நாமல் ராஜபக்ஷவின்) கோரிக்கையை தெரியப்படுத்துகின்றேன். கட்சித் தலைமையின் முடிவுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் கட்சிப் பிரதிநிதிகளை நீங்கள் சந்திப்பதற்கான ஏற்பாட்டையும் அனுமதியையும் அங்கு பெற்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.” – என்று சாரப்பட சுமந்திரன் பதிலளித்தார் எனத் தெரியவருகின்றது.
”13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கும் பற்றி நான் குறிப்பிட்டேன். நாமலின் தந்தையார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘பதிமூன்று பிளஸ்’ தருவார் என உறுதி அளித்திருந்தமையை நான் நினைவூட்டினேன். ஆயினும் 13 ஆம் திருத்தத்தின் முழு நடைமுறையாக்கும் குறித்து அவர் (நாமல்) இன்றைய சந்திப்பில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. காணி, பொலிஸ் அதிகாரப்பதிவு தொடர்பில் 13 இல் சில சிக்கல்கள் இருக்கின்றன என்ற சாரப்பட அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் நல்லாட்சி அரசின் காலத்தில் முழு நாடாளுமன்றமுமே அரசமைப்புப் பேரவையாக மாறி புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டமையை அவர் நினைவூட்டினார். அது கணிசமான அளவு இணக்கத்துடன் முன்னேற்றம் கண்டமையைச் சுட்டிக்காட்டி, அது விட்ட இடத்தில் இருந்து அந்த முயற்சியைத் தொடர்ந்து, இணக்கத் தீர்வு எட்ட எத்தனிக்கக் கூடாதா என்ற ஓர் ஆலோசனையை அவர் முன்வைத்தார். அதில், அதிகார பரவலாக்கள், ஆட்சி முறைமை பற்றிய விடயங்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் ஏகமனதான இணக்க நிலைமை காணப்பட்டமையையும், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான அம்சத்திலேயே முரண்பாடும் இழுபறியும் நீடித்தமையையும் நாங்கள் இருவருமே இன்றைய பேச்சில் எங்களுக்குள் பரஸ்பரம் நினைவூட்டிக் கருத்தைப் பகிர்ந்து கொண்டோம்.
அந்த அரசமைப்பு உருவாக்க முயற்சியில் சட்டம் – ஒழுங்கு தொடர்பான விடயங்களைக் கையாளும் உபகுழுவில் தாமும் அங்கம் வகித்தமையைச் சுட்டிக் காட்டிய நாமல் ராஜபக்ஷ, அந்த முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து, அதனை – புதிய அரசமைப்பு உருவாக்கத்தை – முறையாக மேற்கொண்டு ஏன் நிலையான இணக்கத் தீர்வுக்கு வர முயலக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
“இவை குறித்துத் தமது கட்சியின் தலைமைப் பீடத்துடனும் நிறைவேற்று குழுவுடனும் கலந்தாலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்த பின்னர், அதன் அடிப்படையில் தமிழரசுடன் பேசி முடிவெடுக்கத் தான் விரும்புகின்றார் என்று கோடி காட்டிய நாமல், அதற்காகத் தான் யாழ்ப்பாணத்திற்கு நேரில் வருகின்றார் என்றும் குறிப்பிட்டார்”- என இன்றைய சந்திப்பு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து வெளியிட்டார்.