செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு” – சிறீதரன் செவ்வி

“தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு” – சிறீதரன் செவ்வி

2 minutes read
“தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தனிய ஒரு நபருக்கு அல்ல. இது தமிழினத்தின் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய பாதையைத் திறப்பதாக அமையும். எனவே, இது ஒரு தொடக்கமே தவிர இது ஒரு முடிவு அல்ல.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

“தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுத்தாலும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவில் நீங்கள் உறுதியாக இருப்பீர்களா?” – என்று இலண்டன் வந்திருந்த சிறீதரன் எம்.பியிடம் ‘வணக்கம் இலண்டன்’ இணையத்தளம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8 – 10 இலட்சம் வாக்குகளைப் பெற்றுவிட்டார் எனில் அது வெற்றி என்று கருதப்படமாட்டாது. அது தமிழ் மக்கள், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு  வழங்கிய ஓர் ஆணையாகும்.

குறிப்பாக நாங்கள் எதிர்பார்ப்பது, வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 51 வீதமான வாக்குகளை எங்களுடைய தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அதாவது ‘சங்கு’ சின்னம் பெற்றுக்கொண்டாலே அது மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் இதனூடாக 51 வீதமான தமிழ் மக்கள் மிகப்பெரிய ஆணையை வழங்கியுள்ளார்கள் என்ற செய்தி உலகத்துக்குச் சொல்லப்படும்.

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் முதன்முதலாகக் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, இந்தத் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் தற்செயலாகக் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தோல்வி என்று அர்த்தப்படாது. அது தமிழர்களுக்குத் தோல்வி அல்ல. ஏனெனில், நாங்கள் வடக்கு – கிழக்கில் பெருமளவு வாக்குகளைப் பெறுவதால் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. பெருமளவு வாக்குகளைப் பெறாமல் தோற்பதால் ஜனாதிபதிப் பதவியை இழந்தோம் என்ற வரலாறும் இல்லை. ஆனால், இதனூடாக ஒரு செய்தி தென்னிலங்கைக்கும் – உலகத்துக்கும் சொல்லப்படுகின்றது. நாங்கள் இந்த மண்ணிலே இழந்துபோன இறைமையை மீட்டெடுக்கவும், நாங்கள் மீண்டும் எங்கள் மண்ணில் ஆட்சியுரிமையுடன் வாழ்வதற்குமான ஒரு களத்தைத் திறந்திருக்கின்றோம் என்பதே அந்தச் செய்தி.

இந்த ஆரம்பம் ஒரு தொடக்கமே. அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாங்கள் இவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரைத் தொடர்ந்து களமிறக்க வேண்டும். அது அரியநேத்திரன் அல்ல வேறு எவராகவும் இருக்கலாம்.

தமிழ்ப் பொது வேட்பாளரைத் தொடர்ந்து களமிறக்குவதால் தென்னிலங்கை வேட்பாளர்களும் சரி – தென்னிலங்கை கட்சிகளும் சரி – சிங்கள சகோதரர்களும் சரி தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் பிரச்சினை இருக்கின்றது, அதற்குத் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

எனவே, நாங்கள் ஓர் இனமாக எங்களை அடையாளப்படுத்துவதற்கு இந்தத் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் மிகப் பெரிய ஒரு கருவியாக மாறும்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக நிலம். இந்தப் பூர்வீக நிலத்திலே தமிழர்கள் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்குச் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு பாதையைத் திறக்க வேண்டும். அதற்கான கோரிக்கையாகவே இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். ஆகவே, தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தனிய ஒரு நபருக்கு அல்ல. இது தமிழினத்தின் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய பாதையைத் திறப்பதாக அமையும். எனவே, இது ஒரு தொடக்கமே தவிர இது ஒரு முடிவு அல்ல.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More