Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் மரணம்! – மற்றொருவர் மாயம்

சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் மரணம்! – மற்றொருவர் மாயம்

1 minutes read
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது. இதன்போதே இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்தச் சம்பவங்களில், வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது – 54) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்தார். சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த தயாரூபன் வைஷ்ணவன் (வயது – 30) என்ற இளைஞர் காணாமல்போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

இன்று மாலை நடந்த சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். வழமை போன்று வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர். இதன்போது, உயிரிழந்த நபர் நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்ட அங்கிருந்த மக்கள் – கடற்கரையை அண்டிய பரப்பு மணல் நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டரில் கொண்டு சென்று, பின்னர் அம்புலன்ஸ் மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து இன்று இரவு கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி தொடர்ந்தது. நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More