இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளனர் என்று அறியமுடிகின்றது. ஜனநாயகத் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தச் சுயேச்சைக் குழு தேர்தலில் களமிறங்கவுள்ளது என்றும் தெரியவருகின்றது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஏனைய பங்காளிக் கட்சிகள் வெளியேறி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகச் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. அண்மை நாட்களாகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு வவுனியாவில் கூடி வேட்பாளர்களைத் தெரிவு செய்தது. வேட்பாளர்கள் தெரிவில் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தெரிவால் அதிருப்தியடைந்தவர்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளனர் என்று அறியவருகின்றது.
இந்தச் சுயேச்சைச் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி, ஐ.நாகரஞ்சினி, முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், புதிய சுதந்திரன் பத்திரிகையின் உரிமையாளர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் போட்டியிடவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
இதேவேளை, இந்தச் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுவதற்குத் தென்மராட்சியின் க. அருந்தவபாலனைத் தமிழரசுக் கட்சியின் அதிருப்திக் குழுவினர் அணுகியுள்ளனர் என்றும் அறியவருகின்றது.
இந்தச் சுயேச்சைக் குழு நாளை வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் என்றும் தெரியவருகின்றது.