ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் யாழ். சுன்னாகத்தில் 42 வயதுடைய தமிழர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைதை அடுத்தே அறுகம்பே தாக்குதல் தயாரிப்புப் பற்றிய விவகாரம் அம்பலத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
யாழ். சுன்னாகத்தைச் சொந்த இடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஒருவர் 2016ஆம் ஆண்டு முதல் சில காலம் இலங்கைச் சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகியுள்ளார்.
சிறையில் இருந்த சமயம் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டுக் கைதிகளுடன் இவருக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையானவர் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுடன் கூட்டிணைந்து மீண்டும் ஒரு நாசகார செயலுக்குத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்குச் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் சென் அந்தனீஸ் வீதியைச் சேர்ந்த யோகராஜா நிரோஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மற்றொரு செய்தி தெரிவித்தது.