“தமிழ் டயஸ்போராக்களுக்குத் தேவையான அனைத்துக் கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி வருகின்றது. ஆதலால்தான் மஹிந்தவின் பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் உறுப்பினரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த 116 பாதுகாவலர்கள் ஒரே தடவையில் நீக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மீளாய்வின்றியே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பாதுகாப்புக் குறைப்பின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷவைக் கொலை செய்வதற்குரிய சூழ்ச்சித் திட்டம் உள்ளதா? என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த உணவுப் பரிசோதகர்கள்கூட நீக்கப்பட்டுள்ளனர். உலகில் உணவில் விஷம் கலந்து தலைவர்களைக் கொலை செய்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் உணவுப் பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களை உடன் நீக்கியமைக்குக் காரணம் என்ன? என்று அரசைக் கேட்கின்றோம்.
கனடாவில் இருந்து செயற்படும் தமிழ் டயஸ்போராக்களின் அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி வருகின்றது. வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன. மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்படுகின்றது. இது டயஸ் போராக்களின் தேவைக்காக நடக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்வதற்குரிய களம் அமைத்துக் கொடுக்கப்படுகின்றதா? மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அவசியம். எனவே, பாதுகாப்பைக் குறைக்கும் திட்டத்தை இந்த அரசு மீளப்பெற வேண்டும்.” – என்றார்.