5
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இதன்போது இரு நாட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்த அநுரகுமாரவை நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அரச அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சிவப்பு கம்பளம் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்தார். அப்போது, இருவரும் பேச்சு நிகழ்த்தினர்.
இதில் குறிப்பாக இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
மேலும், மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்தினர்.