செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த 3 மறுசீரமைப்புகள் மிக அவசியம்! – அநுரவிடம் வலியுறுத்தல்

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த 3 மறுசீரமைப்புகள் மிக அவசியம்! – அநுரவிடம் வலியுறுத்தல்

2 minutes read
“இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை மறுசீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்றிட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்தில் எடுக்கப்பட வேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். நீண்டகாலமாக நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர்.

எனவே, கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிக மோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்பட வேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலையும்.

இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப் பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன.

நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக ஊழல், மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக் கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிட வேண்டும்.

மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்பட வேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும் பெரிதும் இடமளிக்கக் கூடிய வகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த முடியாது. எனவே, இந்தக் கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.” – என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More