செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசமைப்பு பற்றிய விடயங்களைக் கையாளத் தமிழரசில் 7 பேர் கொண்ட குழு!

அரசமைப்பு பற்றிய விடயங்களைக் கையாளத் தமிழரசில் 7 பேர் கொண்ட குழு!

1 minutes read
அரசு முன்னெடுக்கும் புதிய உத்தேச அரசமைப்பு விடயங்களைக்  கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றைக் கட்சியின் மத்திய குழு இன்று தெரிவு செய்திருக்கின்றது.

அதேசமயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவைத் தாமதிக்காமல் உடனடியாக முன்வைக்குமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அரசாங்கத்தை வலியுறுத்திக் கோரியிருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் இன்று திருகோணமலையில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இன்று மாலை கூட்டம் முடிவுற்ற பின்னர் அது பற்றிய விடயங்களைக்  கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்கு வெளியிட்டார். அச்சமயம் அருகில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகமும் உடனிருந்தனர்.

பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் கொண்ட எழுவர் குழுவே அரசமைப்பு விடயங்கள் தொடர்பான கட்சியின் நடவடிக்கைகளைக்  கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய அரசமைப்பு உருவாக்க விடயங்கள் தொடர்பில் தேவைப்படும் சமயங்களில் ஏனைய தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடுவது, இது தொடர்பான அரசின் வரைவுத் திட்டங்களை ஆய்ந்து தீர்மானங்களை எடுத்தல் போன்ற விடயங்களை இந்தக் குழுவே கையாளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேசமயம் உள்ளூராட்சி சபைகளுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோரி தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்து இருப்பதால் அதற்கு அமைய வேட்பாளர் நியமனங்களை செய்வதற்குக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே கட்சி தேர்ந்துள்ள வேட்பாளர்களுக்கு – அந்தந்த வட்டாரங்களில் அல்லது கட்சியின் பட்டியலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்து இருந்தவர்களுக்கு – அவர்களின் விருப்புக்கு ஏற்ப அந்த இடங்களில் முன்னுரிமை வழங்கப்படும்

அதேசமயம் வெளிநாடு சென்றவர்கள், கட்சியை விட்டு விலகியவர்கள், கட்சியின் ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் போன்றோரின் வெற்றிடங்களுக்கு உரிய வேட்பாளர்களைக் கட்சியின் அந்தந்தப் பிரதேசக் கட்டமைப்புகளோடு ஆராய்ந்து உரியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் இன்றைய கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More