1
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
தோட்டத்துக்குச் சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாகச் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்தனர். இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சிசுவின் தாய், தாயின் தாயார் மற்றும் குழந்தை பிரசவித்த தாயின் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரையும் நாளை புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.