சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ரி20 சிறப்பு அணியில் இலங்கையின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.
அதிரடி வீரர்களும் அசாத்திய சகலதுறை திறமை உடையவர்களும் இந்த அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியிலும் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் 20 ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வனிந்து ஹசரங்க, 38 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியிருந்தார்.
ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்ரங்கில் அவர் பதிவுசெய்து 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற பந்துவீச்சுப் பெறுதியே கடந்த வருடம் அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது .
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் சிறப்பு அணியின் தலைவராக கடந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் சிறிப்பு அணி (துடுப்பாட்ட வரிசையில்): ரோஹித் ஷர்மா (தலைவர் – இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), பில் சோல்ட் (இங்கிலாந்து), பாபர் அஸாம் (பாகிஸ்தான்), நிக்கலஸ் பூரண் (விக்கெட் காப்பளாளர் – மேற்கிந்தியத் தீவுகள்), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), ஹார்திக் பாண்டியா (இந்தியா), ராஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).