புதுமுக நடிகர் பவிஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும் , இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ‘ எனும் திரைப்படத்தில் பவிஷ் ,அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரஃபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்கே புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘உன் கூட சேர்ந்தா போதும் புள்ள..’ எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் தனுஷ் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். காதலைப் போற்றும் கவித்துவமான வரிகளும், மெல்லிசையும் இணைந்திருப்பதால் இந்த பாடல் இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனிடையே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படத்திற்கு முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷின் பங்களிப்பு உள்ளது என்ற வணிக முத்திரையின் காரணமாக இந்தத் திரைப்படம் எந்தவித இடையூறும் இல்லாமல் திட்டமிட்டபடி பட மாளிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.