சுயேச்சைக் குழுவின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் அடுத்த 8 அமர்வு நாட்களில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்குச் சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சில உரைகள், கருத்துகள் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன்.” – என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மார்ச் 20, 21, ஏப்ரல் 8, 9, 10, மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உரையை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பயன்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அனைத்தையும் ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
மேற்படி காலப்பகுதியில் அவர் ஆற்றும் உரையில் தெரிவிக்கும் விடயங்களை அடிப்படையாகக்கொண்டே தடை நீக்கம் பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.