1
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை – இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று வியாழக்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னக்கோன், நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இது தொடர்பான விடயங்களைப் பரிசீலித்த பின்னர், பிணை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனக் கூறி, பொலிஸ்மா அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னக்கோன் நேற்றுப் பிற்பகல் விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.