செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு எல்லாவற்றிலும் பின்னுக்கு இருக்காமல் முன்னேற வேண்டும்! – ஆளுநர் வலியுறுத்து

வடக்கு எல்லாவற்றிலும் பின்னுக்கு இருக்காமல் முன்னேற வேண்டும்! – ஆளுநர் வலியுறுத்து

3 minutes read
“வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேற வேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் முன்னேறி எமது மாகாணத்துக்குப் பெருமையைத் தேடித் தர வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ‘கிளி முயற்சியாளர் சந்தை’ திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தைக் கட்டடத்துக்கான நிதியுதவியை ஒபர் சிலோன் நிறுவனம் வழங்கியிருந்தது.

சந்தையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர்,

“சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகின்றது. இவர்களுக்கான சந்தைப்படுத்தல் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவாலாக இருந்தது. இப்போது வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் எதிலும் வெற்றியடைய தூரநோக்கு இருக்க வேண்டும். உங்களுக்கு அது இருக்கின்றமையை வரவேற்றுப் பாராட்டுகின்றேன். உங்களுக்கு மேலும் பல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு மிகச் சிறந்த தலைமைத்துவம் கிடைத்திருக்கின்றது. உங்களின் மாவட்ட செயலர் சு.முரளிதரன் சிறப்பான ஒருவர். அவர் உங்களுக்குத் தேவையானவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.

ஆரம்பத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களாக இருந்த பலர் இன்று பெரும் கைத்தொழிற்சாலைகளை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் அவ்வாறு பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கி ஏனையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கு உலக வங்கி உதவி செய்யும் சூழல் உருவாகியிருக்கின்றது. அவற்றை நாம் பயன்படுத்தி முன்னேறவேண்டும்.” – என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன், ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னத்தம்பி சூரியகுமாரி, கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் திருமதி நளாயினி இன்பராஜ், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More