“சஜித், மஹிந்த, ரணில் இணையவுள்ளனர் என்று பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை. இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதைத் தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றன.” – என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அரசு செய்ததையே மீண்டும் செய்வது முறைமை மாற்றமல்ல. மக்களை ஏமாற்ற ஐக்கிய மக்கள் சக்தி அச்சப்படுகின்றது. பொய்யை நம்ப வைப்பதற்கும், மக்களை அரசியல் ரீதியாக ஏமாறுவதற்கும் நாம் பயப்படுகின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியானது முடிவுகளை எடுக்கும் விடயத்தில் சரியான முடிவுகளையே எடுத்து வருகின்றது.
இன்று அரசானது பல்வேறு தலைப்புச் செய்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர முயற்சிக்கின்றது எனப் போலியான செய்திகளைக் கட்டமைத்து வருகின்றது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அத்தகையதொரு தீர்மானத்துக்கு வராது. நாம் இவர்களோடு இணையோம்.
ஐக்கிய மக்கள் சக்தி முதன்முறையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதாலயே இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றார்கள்.” – என்றார்.