“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள். எமது மக்களின் ஆணையுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்போம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சியினுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல தமிழரசுக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ள அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் நாம் அனைத்து சபைகளிலும் ஆட்சியமைப்போம். வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சியை வீழ்த்தவே முடியாது.
எமது தலைவர் பிரபாகரனுடைய பெயரை உச்சரிக்கும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினர் வந்துள்ளார்கள் என்பதற்கு வாழ்த்துகின்றோம். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது பெயரையும், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை மண்ணையும் கூறுகின்றமை வாழ்த்துக்குரிய விடயமாகும்.
தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு வெறும் வாயளவிலானது மாத்திரமே தவிர, இந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. மிக முக்கியமாக எமது வடக்கு மாகாணத்துக்குத் தேசிய மக்கள் சக்தியினர் எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதும் இல்லை. இதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
பட்டலந்த ஆணைக்குழு பற்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தேசிய மக்கள் சக்தி அரசு, பரணகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி. அறிக்கை, உடலகம ஆணைக்குழு ஆகியவற்றில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசுவதற்குத் தகுதியற்றவர்கள்.
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.” – என்றார்.