புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை! – சுமந்திரனிடம் பிரிட்டன் பிரதிநிதி தெரிவிப்பு

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை! – சுமந்திரனிடம் பிரிட்டன் பிரதிநிதி தெரிவிப்பு

2 minutes read
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பென் மெல்லர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்தார்.

அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் கால நீடிப்பு தொடர்பிலும் பரஸ்பர கருத்துக்களைப் பகிர்ந்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பென் மெல்லருக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் பிரித்தானியா தலைமை தாங்கிக் கொண்டுவரவுள்ள விடயத்தை பென் மெல்லர் பகிர்ந்தார்.

அத்துடன், குறித்த பிரேரணைக்கு இலங்கை அரசின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கான சாதகமான நிலைமைகள் குறைந்தே காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இலங்கையில் ‘நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை’ நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரித்தானியா கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பை வரவேற்ற சுமந்திரன், அதற்கான அவசியத்தையும், சர்வதேச தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டார்.

விடேசமாக தற்போதைய அரசு கடந்த கால தவறுகளை சரி செய்து முறைமை மாற்றத்தையே மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது. இவ்வாறான நிலையில் அந்த அரசாலேயே அதற்கான இலக்குகளை முன்னகர்த்த முடியும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, பென் மெல்லர் வடக்கு, கிழக்கு  மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டதோடு, அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுமந்திரனிடம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், வடக்கு, கிழக்கு மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான நிரந்திரமான தீர்வொன்று இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

அரசைப் பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தபோதும் அவற்றை இன்னமும் பூர்த்தி செய்யாத நிலைமைதான் நீடிக்கின்றது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில், சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறையின் கால எல்லையையும் நீடிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More