இன்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.
வலிகாமம் வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினரான க.இளங்குமரன் மற்றும் சுயேச்சைக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.
குறிப்பாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் காதல் விடயங்கள், பெண்களை ஏமாற்றிய செய்திகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையிட்டனர்.
இந்நிலையில், குறித்த விவாதத்தை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் இ.சந்திரசேகரிடம் வலியுறுத்தினார்.
ஆனால், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த முடியாது ஆளுமையற்றவராகக் காணப்பட்டார்.
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆளுமையற்ற நிலையை அவதானித்த சிறீதரன் எம்.பி. கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.
அரச அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றமையாலும், இவர்கள் சபை நாகரிமற்ற வகையில் தொடர்ந்தும் தர்க்கம் புரிகின்றமையாலும் தான் கூட்டத்தை விட்டு வெளியேறிச் செல்வதாக இதன்போது சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கிடையிலான வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.