செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதியோர் உதவித்தொகை  பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

முதியோர் உதவித்தொகை  பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

3 minutes read

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பயனாளிகளுக்கு அது கிடைக்காமல் குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்கொன்றுக்கு வழங்கப்படுவதன் ஊடாகப் பிரச்சினையான நிலைமை ஏற்படுவதாகவும், குறித்த தொகையை தபால் நிலையங்களின் ஊடாக மாத்திரம் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும்  குழுவின் உறுப்பினர்கள்  வலியுறுத்தினர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர்  பதிலளித்துள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான நிதி,கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில்  தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் நிதி, கொள்கை வகுத்தல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில்  நடைபெற்றது.

கடந்த காலத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் போது இலங்கை சுங்கத்தினால் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கேள்வியெழுப்பினர்.

இது அரசாங்கத்தின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாக சிலர் அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், இனவே இது பற்றி சரியான விளக்கம் அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம், கொள்கலன்களை விடுவிக்கையில் இதுபோன்று நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப நடவடிக்கையாக இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் இதுபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக திறைசேரியின் உதவிச் செயலாளரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விடயத்தைக் குழுவிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், இதன் உண்மை என்ன என்பது தெளிவுபடுத்தப்படுவதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் இதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிரச்சினை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கான தகவல்களைத் திரட்டும்போது அரசாங்க அதிகாரிகள் அதற்கு தயக்கம் காண்பித்தமையால், பல்வேறு தரப்பினர் தரவுச் சேகரிப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் தரவு சேகரிப்பில் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 8 இலட்சம் விண்ணப்பப் பத்திரங்கள் கிடைத்ததாகவும்இ இதில் ஏறத்தாழ 7 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர்

குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் முன்னர் காணப்பட்ட குறைபாடுகளைப் பூர்த்திசெய்து எதிர்வரும் யூலை மாதத்தில் இந்த நடவடிக்கையைப் பூரணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். உண்மையிலேயே சலுகைகளைப் பெறத் தகுதியுள்ள நபர்கள் இந்தக் கணக்கெடுப்பிலிருந்து விலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அவதானமாக இருக்க வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மாற்றங்களைச் செய்வது போன்ற சிறிய புதுப்பிப்புகளை பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பயனாளிகளுக்கு அது கிடைக்காமல் குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்கொன்றுக்கு வழங்கப்படுவதன் ஊடாகப் பிரச்சினையான நிலைமை ஏற்படுவதாகவும், குறித்த தொகையை தபால் நிலையங்களின் ஊடாக மாத்திரம் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.

உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் 15 சதவீத சேவை ஏற்றுமதி வரியை அறவிடுவது தொடர்பில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். நியாயத்தன்மை கொள்கையைப் பயன்படுத்தி, அதிகபட்சமாக 15 சதவீதம்  என்ற எல்லைக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பிரதியமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடுன், 15சதவீத  என்ற இந்தத் தொகை ஈட்டப்படும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகின்றது என்ற தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும்,  இது வருமானத்தில் அன்றி பெறப்படும் இலாபத்திற்கு விதிக்கப்படும் வரியென்றும் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஒரு நாட்டில் வரி செலுத்தப்படும்போது இரட்டை வரிவிதிப்பு அல்லது மீண்டும் வரி விதிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கமளித்தனர்.

அத்துடன், 36 சதவீத அதிகபட்ச எல்லையின் கீழ் ஏனைய தனி நபர்கள் வருமான வரி செலுத்தும் பின்புலத்தில் இந்த வரி அறவீட்டு அதிகபட்ச எல்லை 15சதவீதமாக  ஆக வரி அறவிடப்படுகின்றது. இதனை முன்னர் மேற்கொண்ட 30 சதவீத மதிப்பை 15சதவீதமாகக் குறைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய அனைவரையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தும் சமூக நீதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, யாருக்கும் பாதகமாக இருக்காது என்பதை வலியுறுத்தினர்.

2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 40,000 அதகாரிகள் பயிற்சியின் பின்னர் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகவும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து முடிவுகளும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதால், துல்லியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பழைய சட்டங்களுக்குப் பதிலாக ஒரு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டவரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அமைய எதிர்காலத்தில் மிகவும் நம்பகமான தரவு சேகரிப்புக்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More