புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொய்யுரைக்கும் அநுர அரசுக்கு வாக்குகளால் பாடம் புகட்டுங்கள்! – மக்களிடம் சஜித் வேண்டுகோள்

பொய்யுரைக்கும் அநுர அரசுக்கு வாக்குகளால் பாடம் புகட்டுங்கள்! – மக்களிடம் சஜித் வேண்டுகோள்

2 minutes read
“வளமான நாடு அழகான வாழ்க்கை என்று ‘திசைகாட்டி’ பொய்யான தேர்தல் விஞ்ஞாபனப் பத்திரத்தையே முன்வைத்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொய்யுரைக்கும் இந்த அரசுக்கு மக்கள் தமது வாக்குகளால் திருப்பத்தை ஏற்படுத்தும் செய்தியை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொலனறுவை மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“வளமான நாடு அழகான வாழ்க்கை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் பொய்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனப் பத்திரத்தையே முன்வைத்துள்ளனர். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு  ஆட்சிக்கு வந்துள்ளது. வரவு –  செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது ஆளுந்தரப்பினர் இந்த விஞ்ஞாபனத்தைக் காட்டி காட்டி விவாதத்தில் ஈடுபட்டனர்.

மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீதம் மின் கட்டணத்தைக் குறைப்பதாக தேர்தல் மேடைக்கு மேடை உறுதியளித்து இந்த அரச தரப்பினர் ஆட்சிக்கு வந்தனர். ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது என மின்சார சபை அறிவித்தது. ஆனால், மக்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு பொதுப் பயன்பாட்டுக்கு ஆணைக்குழு 20% மின் கட்டணத்தைக் குறைத்தது. வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் மேலும் 13% ஆல் குறைக்க வேண்டும்.

எரிபொருள் விலை தொடர்பாகவும் இதுபோன்ற கதைகளே கூறப்பட்டன. கமிஷன், வரி என்று பேசி, அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை நீக்கி பாரிய விலைக் குறைப்பைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால், இன்னும் எரிபொருள் விலை குறையவில்லை.

35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் வாக்குறுதி கூட திசைகாட்டியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறான கதைகளைக் கூறி, பட்டதாரிகளை ஏமாற்றி இன்று பட்டதாரிகளை துரத்தி துரத்தித் தாக்குகின்றனர். வேலை பெற்றுத் தருவோம் என திசைகாட்டி தலைவர்கள் தேர்தல் மேடையெங்கும் முழங்கிவிட்டு இன்று அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த வரவு – செலவுத் திட்ட விவாத காலப்பிரிவில் பொல்துவ சந்தியில் பல நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் இறுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு மக்களை ஏமாற்றும் அரசே தற்போது காணப்படுகின்றது.

மருந்துகள், உணவுப் பொருட்கள், பாடசாலை பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என அநுர சூளுரைத்தார். அவை இன்னும் நீக்கப்படவில்லை. இது தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்தி, இந்த ஜனாதிபதி தலைமையிலான அரசை மக்கள் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு செல்ல வேண்டும். பொய் கபட நாடகம் ஆடி, இந்த அரசு உலக சாதனை படைக்கும் விதமாகப் பொய் உரைத்து வருகின்றது.

இன்று விவசாயிகளுக்கு உத்தரவாத விலை, அனர்த்த இழப்பீடு, உர மானியம் கூட கிடைத்தபாடில்லை. விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை மட்டுப்படுத்தி, இந்த அரசும் முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளையே பின்பற்றி வருகின்றன. புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை கொண்டு வருவதாகக் கூறினாலும், எந்த மாற்றமும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதியின் உடன்படிக்கையையே கொண்டு செல்கின்றனர். இதனால் பெரும்பான்மையான மக்கள் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர்.

இன்று சட்டம் கோலோச்சுவதாக தென்படவில்லை. குண்டர்கள், கொலைகாரர்கள், கப்பம் ஈட்டுபவர்கள்  சமூகத்தை ஆள்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், குடிமக்கள் என சகலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் சமூகமானது இந்த அரசுக்கு ஒரு திருப்புமுனைக்கான செய்தியை தெரிவிக்க வேண்டும். தமது வாக்குகள் மூலம் மக்கள் இந்த திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More