வலியுணரா சிறுமி அறிந்திருக்கவில்லை
கந்தக புகையூடே துருப்புக்காவியில்
கடத்தப்பட்ட தந்தையை
கொடூர பசியில் செவ்வரத்தம் பூக்களின்
இதழ்களை மென்றுதின்னும்
சிறுவனுக்கு தெரியவில்லை
என் தந்தை நகங்கள் பிய்த்தெறியப்பட்டு
விரல்கள் நசுக்கப்பட்ட குரூரத்தை
கந்தககாற்றின் நடுவே கிழிந்த செவ்வரத்தம்
செடிகளை போல கொலைமண் பூத்த
காடுகளின் நடுவே என் அக்கா தங்கை வன்புணரப்பட்டு தூக்கியெறியப்பட்ட
சேதி அறிந்திருக்கவில்லை
சித்திரவதை முகாமில் சிறைப்பட்ட
என் அப்பனுக்கு
எறியப்பட்ட துப்பாக்கியை தூக்கும்
குழந்தை சுவாசித்திருக்கும் போலும்
என் இறந்தகால சந்ததியின் கந்தக காற்றை
கேசுதன்