புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு, கிழக்கு வதை முகாம்கள் குறித்து பேச அரசு தயாரில்லை! – சத்தியலிங்கம் சாடல்

வடக்கு, கிழக்கு வதை முகாம்கள் குறித்து பேச அரசு தயாரில்லை! – சத்தியலிங்கம் சாடல்

2 minutes read
“பட்டலந்த வதை முகாம் போல் பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கின. இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசு தயாரில்லை.”

– இவ்வாறு சாடியுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்.

வவுனியாவில் உள்ளூராட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் சிறப்பாகச் செயற்பட்டால் அதன் பின் வரும் மாகாண சபைத் தேர்தல், 5 வருடங்களின் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் சிறப்பான வெற்றியைப் பெற முடியும்.

முல்லைத்தீவில் பாரம்பரிய வைத்தியம் படித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். பிரதேச சபைகள் இலசவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும். அதற்கேற்ப சட்டங்களை வகுத்து சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்க முடியும். அதில் அவர்களை வைத்தியர்களாக நியமிக்க முடியும்.

கட்சியைப் பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபைகள் அவசியம். அத்துடன் மக்களுக்குச் சேவை வழங்க அவை முக்கியமானவை. தேர்தல் நேரம் பலர் வருவார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாகத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகத் தியாகங்களை செய்த தாய்க் கட்சி ஆகிய தமிழரசுக் கட்சி சீசனுக்கு வரும் பறவைகள் அல்ல. நாம் மக்களுடனேயே இருக்கின்றோம்.

வவுனியா வடக்கு பிரதேசத்துக்குத் தண்ணீர் வரவில்லை. ஆனால், மகாவலி எல் வலயம் ஊடாக பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திட்டமிட்ட இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இதேபோன்று, செட்டிகுளம் பிரதேசம் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிதாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்களை நேர்மையாக மக்களுக்காகச் செயற்படுத்தினால் நல்லது. ஆனால், இவ்வாறான திட்டங்களின் பின்னால் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறலை ஏற்றுக்கொள்ள இந்த அரசும் தயாரில்லை.

அண்மையில், 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது.

தற்போதைய அரசு இந்தத் தடையை, “ஒரு தலைப்பட்சமான இந்த முடிவை
ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

பட்டலந்த அறிக்கை பற்றிப் பேசும் அவர்கள், பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் இயங்கின. தங்கள் உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை.

கடந்த கால அரசுகள் என்ன பதிலைத் தந்தார்களோ அதே  பதிலைத்தான் இவர்களும் சொல்கின்றார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த அரசுக்கு ஒரு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்குள் இந்த நாடு இருந்தது. அவர்கள் உடனடியாக மஜிக் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாகச் செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More