புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

4 minutes read
“ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப் போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்  ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது. தொழிற்சாலையை விருந்தினர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தனது வரவேற்புரையில், மன்னாரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை விட ஆனையிறவு உப்பே தரமானது எனக் குறிப்பிட்டார். தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்துக்கு 5 மெட்ரிக் தொன் மேசை உப்பை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டிலிருந்து உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்,

“வடக்கு மாகாணத்து இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிய பல தொழிற்சாலைகள் போரினால் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பின்மை எமது மாகாணத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அரசு பதவிக்கு வந்த பின்னர் ஆனையிறவு உப்பு தொழிற்சாலையை மீள முழு வீச்சில் இயக்க ஆரம்பித்திருக்கின்றது.

ஆனையிறவு உப்புக்கு தனித்துவமான மதிப்பு இருக்கின்றது. அந்தவகையில் இதை மீளச் செயற்படுத்துவதானது சிறப்பானது.

எதிர்காலத்தில் ஆனையிறவு உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது மாகாணம் மேலும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்.” – என்றார்.

கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தனது உரையில்,

“இன்றைய நாள் உங்களுகளும், எங்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். பல இன்னல்களைச் சந்தித்தாலும் எமது மண்ணின் வாசத்தை பரப்பியது ஆனையிறவு உப்புத்தான். பலரும் விரும்பிப் பயன்படுத்து ஆனையிறவு மேசை உப்பு மீண்டும் உங்கள் கைகளுக்கு வரப்போகின்றது. ஆனையிறவு உப்புக்கு தனியான ‘மவுசு’ உண்டு. விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் உலகம் எங்கு இது விற்பனையாகும்.” – என்றார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,

“இன்றைய நாள் எல்லோருக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். எமது அரசு பதவிக்கு வந்த 5 மாதங்களில் இந்தத் தொழிற்சாலையை திறந்து வைத்திருக்கின்றோம். கடந்த காலங்களில் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை வேறு தரப்புக்கள் கொள்வனவு செய்து வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்தார்கள். இப்போது இங்கிருந்தே மக்களுக்கு உப்பை விற்பனை செய்யும் வகையில் நாம் மாற்றியமைத்துள்ளோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More