“அடுத்த வாரம் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி நாங்கள் தமிழரசுக் கட்சியினர் உட்பட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கோரியிருக்கின்றோம். ஆனால், இன்னமும் சந்திப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை. சந்திப்பு நடக்குமா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் தமிழர் தரப்பில் யார் சந்திப்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமரை அவர் உட்பட்ட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவர் என்று வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
”சந்திப்புக்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. இந்திய அதிகாரிகள் இன்னும் தெளிவான பதில் எதனையும் எங்களுக்குத் தரவில்லை. சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையில் அது பற்றி பேசுவது அர்த்தமற்றது.” – என்றார் சுமந்திரன்.