செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயரல்ல | பொ. ஐங்கரநேசன்

ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயரல்ல | பொ. ஐங்கரநேசன்

1 minutes read

இலங்கையில் உப்பளங்களை நிர்வகித்து வருகின்ற தேசிய உப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (National Salt Ltd) ஆனையிறவில் விளையும் உப்புக்கு றஜலுனு (Rajalunu) எனப் பெயரிட்டுள்ளது. இதுகாலவரையில் ஆனையிறவு உப்பு என விழிக்கப்பட்டு வந்த உப்பு றஜலுனு எனப் பெயரிடப்படும் அளவுக்கு, ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல. அது தமிழ் மக்களின் வரலாற்றில், வாழ்வியலில், பொருளியலில், போரியலில் பின்னிப்பிணைந்து அவர்தம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்ட பெயர் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனையிறவில் தயாரிக்கப்படும் உப்புக்கு ‘றஜலுனு’ என்ற வர்த்தக நாமம் சூட்டப்பட்டிருப்பது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

யானைகள் தாவர உண்ணிகள் என்பதால் அவற்றின் உடலில் உப்புச்சத்துப் பற்றாக்குறைவு ஏற்படும்போது அவை உப்பைத்தேடிச்சென்று உண்பது வழமை.

ஆனையிறவு என்ற பெயர் நிலவுவதற்கு, வன்னிக் காட்டுயானைகள் உப்பைத் தேடிவந்த கடவை இது என்பதோடு, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் வன்னியானைகள் ஏற்றுமதியின் பொருட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பாதையாக இது அமைந்தமையுமே காரணமாகும்.

ஆனையிறவுக் கடல் நீரேரிகளின் கரைகளில் உப்பு விளைவதை அவதானித்த ஆங்கிலேயர்கள் 1938இல் ஆனையிறவு உப்பளத்தை அமைத்தனர். இங்கு விளையும் உப்பை மூலப்பொருளாகக் கொண்டு 1954இல் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை உருவானது. உப்பளமும், இரசாயனத் தொழிற்சாலையும் யுத்தம் உச்சம்பெறும் வரைக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தன.

ஆனையிறவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக 1760இல் போர்த்துக்கேயர்கள் தங்களது இராணுவத் தளமாக இங்கு கோட்டையொன்றை உருவாக்கினர். பின்னர் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று இலங்கையை ஆண்ட அந்நியர்களிடம் கைமாறிய இக்கோட்டை சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் வசமாகியது. 1952இல் இக் கோட்டை நவீனவசதிகளுடன் கூடிய இராணுவத் தளமாக வடிவமைக்கப்பட்டது.

ஆனையிறவுப் பாதையால் பயணிப்பது என்பது மரணத்தின் குகையினூடாகச் செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ் மக்கள் நடுங்கும் அளவுக்கு பின்னாளில் இங்கு அமைந்திருந்த சோதனைச் சாவடிகள் திகிலூட்டுவனவாக அமைந்திருந்தன. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் இங்கு கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதும், பின்னர் இக்கோட்டை விடுதலைப்புலிகள் வசமாகி நிர்மூலமாக்கப்பட்டதும் வரலாறு.

ஆனையிறவு இவ்வளவு முக்கியத்துவங்களோடு இடவமைவு காரணமாக இங்கு விளையும் உப்புக்கு முதல்தரமான உப்பு என்ற பெருமையையும் தேடிக்கொடுத்தது. ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளி மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக றஜலுனு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உப்பில்லாப் பண்டம் மட்டுமல்ல, அது றஜலுனு உப்பாக இருந்தால் தமிழ் மக்களின் மனோவுணர்வில் அதுவும் குப்பையில்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More