குச்சவெளியில் திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என ‘குச்சவெளி” நில ஆக்கிரமிப்பு குறித்து ஆவணப்படத்தின் இயக்குநர் செல்வராஜா ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தயாரித்துள்ள குச்சவெளி ஆவணப்படத்தின் காட்சிப்படுத்தல் கலந்துரையாடல் கொழும்பு லக்ஸ்மன்கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராஜா ராஜசேகர் மேலும் தெரிவித்ததாவது,
குச்சவெளி ஆவணப்பட காட்சிப்படுத்தலில் பெரும் சவால்களை எதிர்கொண்டோம். அந்த இடத்திற்கு செல்வது மக்களை சந்திப்பது வீடியோ எடுப்பது எல்லாமே சவாலான விடயங்கள்.
சில சந்தர்ப்பங்களில் பின்வாங்கினோம். அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அந்த பகுதிகளில் கண்காணிப்பும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது.
குச்சவெளியை பவானி பொன்சேகாபரிந்துரைத்ததும் அது சவாலான விடயமாக விளங்கியது. குச்சவெளியில் உள்ள 32 விகாரைகளில் 24 விகாரைகளிற்கு நான் தனியாளாக பயணம் செய்துள்ளேன். அங்கு இடம்பெறும் நில அபகரிப்பிற்கு ஒரு சாட்சியாக இருக்கவேண்டும் என விரும்பினேன்.
என்னுடைய பெயரை மதத்தை மொழியை மாற்றவேண்டிய நிலையேற்பட்டது. சுற்றுலாப்பயணிக்கு வழிகாட்டி போல அங்கு சென்றேன். தூண்டிலில் மீன்பிடித்தேன். சில காட்சிகளை அகற்ற வேண்டியிருந்தது.
இந்த ஆவணப்படத்தில் நீங்கள் டிரக்டரில் அரிசி மூடையை ஏற்றிச்செல்வதை பார்க்கலாம் அது தமிழ்மக்களின் நிலத்தில் சிங்களவர்கள் விவசாயம் செய்து கொண்டு செல்லும் நெல்.
நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை அதனை அறிந்த பிக்கு மலையிலிருந்து தனது ஆட்களுடன் கீழே வந்து எங்களை சுற்றிவளைத்தார். காலை பத்து மணிமுதல் நான்கு மணிவரை நாங்கள் காட்டு பாதை ஒன்றின் ஊடாக பத்து கிலோமீற்றர் நடந்து தப்பி வந்தோம். இந்த ஆவணப்படத்திற்காக இவ்வாறான பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.
புல்மோட்டை பொன்மலைக்குடா முஸ்லிம் மக்களின் மையவாடி பிரச்சினை தொடர்பாக குறித்த ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்தில் வீடியோப் பதிவுகளை மேற்கொண்டிருந்த போது கடற்படையைச் சேர்ந்த இருவர் முச்சக்கரவண்டியில் அச்சுறுத்தும் தொனியும் நடந்துகொண்டார்.’
நான் வரலாற்றுத்துறை சார்ந்த ஆய்வாளனோ அல்லது கல்வியாளனோ அல்ல. சரியான ஆண்டுகளும் தெரியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறை ஏதோவொரு காரணமாகஇ ஆக்கிரமிப்பாகக் கூட இருக்கலாம் அது அப்படியே அழிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டிருக்கலாம்.
ஆனால் அதற்குப் பின்னர் வந்த ஒரு சமூகம் இனக்குழுவொன்று அந்த இடத்தில் வழிபாட்டு நடைமுறைகளை கடந்த 500 வருடங்களாக மேற்கொண்டுவருகிறது. இப்போது திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்துவார்கள்.
இதுவரை காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்களின் அடையாளத்தை பாரம்பரியத்தை கலாசாரத்தை பொருளாதாரத்தை அந்த மண்ணுடனான அவர்களது வாழ்வியலை ஒரு இரவில் அறுத்துதெறிந்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலைநிறுத்துவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது.
2500 ஆண்டுகால வரலாறு முக்கியத்துவம் அளிக்கப்படும்இ 500 ஆண்டுகால மக்களது வாழ்வியல் சான்றுகள் மீது கொள்ளத் தேவையில்லை என்பதா அர்த்தம். அப்படியென்றால் இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்தான் ஆகிறது. அவர்களுக்கு அப்படி ஒன்றும் வழங்கவேண்டிய அவசியமில்லைஇ இந்திய வம்சாவளிகள்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதா?
ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில் காணப்படும் விகாரை ஊடாகவே தெட்டத்தௌிவாகிறது. இது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அமைப்பு என்று.