செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மோடி – தமிழ்த் தலைவர்கள் விரிவான பேச்சுகள்!

மோடி – தமிழ்த் தலைவர்கள் விரிவான பேச்சுகள்!

3 minutes read
இலங்கைக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் நான்கு மணி முதல் சுமார் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசிய இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழு நடைமுறையாக்கம் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவை தொடர்பில் அவருக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டேலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ரெலோ தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய ஏழு பேரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சுமந்திரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய மூவரும் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை எடுத்துரைத்தனர்.

“இலங்கையின் இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவே நேரடியாக தலையிட்டது. தொடர்ந்து இந்த விடயத்தில் காத்திரமாகப் பங்களித்தது, அந்த முயற்சி முழுமையாக நிறைவு பெறுவதற்கான நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து எடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

இந்த விவகாரத்தை ஒட்டி இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தான போதிலும், அதில் உள்ள அதிகாரப் பரவலாக்கள் விடயங்கள் முழுமையாக 13 ஆவது திருத்தத்தில் கொண்டுவரப்படவில்லை.

13 ஆவது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட அதிகாரப் பரவலாக்கள் விடயங்கள் மேலும் வலுவூட்டப்பட்டு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை 2010, 2011, 2012 கூட்டு அறிக்கைகள் மூலம் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே ஒப்புக் கொண்டிருக்கின்றன.

அரசியல் தீர்வை மேலும் வலிமையாக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரம், சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக, முறையாக நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்தவும் இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

இது தொடர்பில் இன்று காலை தன்னுடைய கூட்டறிக்கையில் இந்திய பிரதமர் வலியுறுத்தமைக்காக தமிழர்களின் சார்பில் நன்றிகளைத்  தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்று குறிப்பிட்ட சுமந்திரன், தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற விடயத்தை இந்தியப் பிரதமருக்கு விவரித்தார்.

திருகோணமலை மாவட்டம், குச்சவெளியை அதற்கான உதாரணமாக எடுத்துரைத்த சுமந்திரன், இந்துக் கோயில்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரைகளின் பெயர்களில் மாற்றம் செய்யப்படுவதை விவரித்தார்.

அச்சமயத்தில் குறுக்கிட்ட இந்தியப் பிரதமர், அந்த நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்படுகின்றனவா, தற்போதைய அரசும் அதை மேற்கொள்கின்றதா என்று கேள்வி எழுப்பினார்.

அரசின் திணைக்களங்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் அவை அரசு ஆதரவோடு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் என தமிழர்கள் பிரதிநிதிகள் பதில் அளித்தனர்.

இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதற்குத் தரை வழிப்பாதை, விமான வழித் தடங்கள், கப்பல் பயணப் போக்குவதற்கு ஆகியவை மேம்படுத்தப்படுவதை தமிழ்ப் பிரதிநிதிகள் வரவேற்றனர். இலங்கையும் இந்தியாவும் நெருங்கி வருவது இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பானது என்று அவர்கள் கருத்து வெளியிட்டனர்.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரை இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அதிகாரப் பகிர்வு முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட சுமந்திரன், அது சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்பது தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டார்.

ஒற்றையாட்சி முறைமையின் கீழ் இணக்கமான தீர்வு சாத்தியம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் நிரந்தரமான, நீதியான, நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகமாக இலங்கையில் – தமிழர் பிரதேசத்தில் – சீனா காலூன்றுவதற்கு தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை குறித்து விவரித்த சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைக் குறிப்பிட்டனர்.

இந்த மீனவர் பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக இருப்பது பாரம்பரிய முறைகளுக்கு மாறாக கடல் அடி ஆழத்தில் இருக்கும் மீன் வளத்தை அள்ளி எடுக்கும் இரட்டை மடிவலை மீன் பிடி முறைமை தடுப்பார் இன்றி தொடர்வதுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், அதனைத் தடுப்பதற்கு 2017 இந்திய அரசு ஒப்புக்கொண்ட போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சினை நீடிப்பதற்கான காரணம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீள இலங்கைக்கு திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உட்பட பல விடயங்களைச் சுமந்திரன் முன்வைத்தார்.

சந்திப்புக்காகத் தமிழர் பிரதிநிதிகள் வந்தபோது முன்னைய சந்திப்புகளில் தமிழர் பிரதிநிதியாகத் தம்மைச் சந்தித்த மூத்த தலைவர்களான இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் இந்தச் சந்திப்பில் இல்லை என்று குறிப்பிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இருவரின் மறைவுக்கும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியப் பிரதமரோடு இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்றி, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.

ஆங்கிலத்தில் உரையாடல் இடம்பெற்றது. இந்தி மொழியில் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More