கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு தற்காலிக உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசர் முஹமட் லபார், நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த உத்தரவை விடுத்தது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களைத் தொடர்ந்து விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் தீர்மானித்தமையை அடுத்து இந்த உத்தரவு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கே முதல் கட்டமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
மனுக்களை எதிர்க்கும் பதில்களை மே 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிர் மனுதாரர்களை அறிவுறுத்தியுள்ளது. அவற்றுக்கு ஏதேனும் எதிர் பதில்கள் இருந்தால் மே 7 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
மனுக்கள் மே 16 ஆம் தேதி மறுஆய்வு செய்யப்பட உள்ளன. மனுக்கள் முழுமையாக ஆராயப்படும் வரை இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும்.
மே 6 ஆம் திகதி இந்தத் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இதேசமயம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்கு கட்சியின்) 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்தும், மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்தும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன எனத் தெரிகின்றது.
இதுபோன்று உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மொத்தமாக 30க்கும் அதிகமான ரிட் மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன என அறியவந்தது. இந்த மனுக்கள் வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் எடுக்கப்பட இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.