தயாரிப்பு : ஸ்டொனெக்ஸ்
நடிகர்கள் : பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா, சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா மற்றும் பலர்.
இயக்கம் : ராம் பிரபா
மதிப்பீடு : 2 /5
ஓரளவு சந்தை மதிப்புள்ள நடிகர்களின் நடிப்பில், போதுமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ தரைப்படை ‘ எனும் திரைப்படம், ரசிகர்களை உற்சாகமடைய செய்ததா? சோர்வடையச்செய்ததா ? என்பதை தொடர்ந்து காண்போம்.
எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டித் தொகை அதிகம் தருவதாக பேராசை காட்டி மக்களிடமிருந்து இந்திய மதிப்பில் ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வசூலித்து விட்டு, அதனை தங்கக் கட்டிகளாகவும் , வைரங்களாகவும் மாற்றிக் கொண்டு ஒரு கும்பல் தலைமறைவாகி விடுகிறது.
அந்த கும்பலின் தலைவனை, பிரஜின் துப்பாக்கியால் சுட்டு, அவனிடம் இருக்கும் தங்கங்களையும், வைரங்களையும் கொள்ளையடித்துவிட்டு சென்று விடுகிறார்.
இதனால் ஏமாற்றபடையும் கும்பல், விஜய் விஷ்வாவை பணிக்கு அமர்த்தி, பிரஜினிடமிருக்கும் நகைகளை மீட்டுத் தருமாறு கேட்கிறார்கள். இதனிடையே மும்பையில் இருந்து குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த ஒருவரின் மகனான ஜீவா, தன் குடும்பத்தை தேடி சென்னைக்கு வருகிறார். இந்த மூவரும் தங்களது முயற்சிகளில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்வது தான் இப்படத்தின் கதை.
எக்சன் படம் என்றால் அதிரடி சண்டைக்காட்சி, விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள், பஞ்ச் டொயலாக்குகள், எமோஷனல் காட்சிகள், காதல் காட்சிகள், என்ற ஃபார்முலாவை முன்வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் திரைக்கதை ஆரம்பகட்ட ரசிகர்களில் ஒரு பிரிவினருக்கு பிடிக்கலாம்.
நடிகர்கள் பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா, மூவருக்கும் சமமான திரை தோன்றல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மூவரும் தங்களுக்கான பிரத்யேகமான நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர முயற்சிக்கிறார்கள்.
நடிகைகள் சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா, ஆகிய மூவரும் மூன்று நாயகர்களுக்கு ஜோடியாக இருந்தாலும் பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
எக்சன் காட்சிகள் அதிகம் என்பதால் ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சி இயக்குநரும் கூடுதலாக உழைத்திருக்கிறார்கள். இவர்களின் உழைப்பை ரசிகர்களுக்கு கடத்துவதற்கு இசையமைப்பாளரும் தன்னாலான பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார்.
தரைப்படை – தரிசு படை