கம்பஹா – பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் பியகம, கிரிபத்கொடை,கடுவலை, வெலிவேரிய மற்றும் அவிசாவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள பல வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடுகளிலிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் 02 தொலைக்காட்சிப் பெட்டிகள், 01 கணினி, 05 தங்கக் கட்டிகள், 01 எரிவாயு சிலிண்டர், 01 சலவை இயந்திரம் மற்றும் 01 குளிர்சாதன பெட்டி என்பன சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.