காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவை பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக இராஜகிரிய பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளனர்.
25 முதல் 35 வயதுக்குட்பட்ட 22 இந்திய பிரஜைகளே கைதாகியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.