தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பட்டலந்த அறிக்கையில் வரலாற்று சிறப்புமிக்க பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு அப்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
1983 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது.1987 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஆயுத போராட்டம், மக்கள் போராட்டம் ஏதும் காணப்படவில்லை. நான்கு ஆண்டுகாலமாக அடக்கு முறைகளும், படுகொலைகளும், அழிவுகளும் மாத்திரமே இருந்தது.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது யார் தீ வைத்தது. அப்போது எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தான் நாடு தழுவிய ரீதியில் தீ வைத்தது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் சுதந்திர கட்சி கலவரத்துக்கு மத்தியில் கொள்ளையடித்தது. இதற்கு பல சாட்சிகள் உள்ளன. இந்த சாபத்தினால் தான் சுதந்திர கட்சி இன்று அழிவடைந்துள்ளது.
இந்த நாட்டில் நல்லிணக்கம் என்ற விடயத்தை மறக்க முடியாது.பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி எதிர்க்கட்சிகள் ஏதும் பேசவில்லை. எவ்விதமான உரிய காரணிகளுமில்லாமல் தான் 1982 ஆம் ஆண்டு ஜே.ஆர். தேர்தலை பிற்போட்டார்.
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தை உருவாக்கினார். இதனால் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு வரமாட்டார்கள். மனித படுகொலைக்காகவே நாட்டை நாசம் செய்தார்கள்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்கு இந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களும், மக்கள் விடுதலை முன்னணியும், கம்யூனிச கட்சியும் ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை.ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார்கள். அதன் விளைவாகவே போராட்டங்களும், கலவரங்களும் தோற்றம் பெற்றன.
மனித படுகொலையாளிகளுக்கு தண்டனையளிப்பதற்காக மாத்திரம் பட்டலந்த விசாரணை அறிக்கையை கொண்டு வரவில்லை. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
வடக்கில் நேர்ந்த அழிவு பற்றி பேசுவதில்லையா என்று வடக்கு மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எமது கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் நந்திகடல் வரை சென்று உயிர்தப்பியவர்கள். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான விசேட திட்டங்களை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் பகுதியில் செயற்படுத்துவோம். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்.
தென்னாப்பிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம்.
உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்றார்.