செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்! – யாழில் ஜனாதிபதி உறுதி

படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்! – யாழில் ஜனாதிபதி உறுதி

5 minutes read
“யுத்த காலத்தில் மக்களின் காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சுவீகரிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறிக்கொண்டு இனியும் மக்களின் காணிகளை வைத்திருப்பதை நாம் விரும்பவில்லை. விடுவிக்கக் கூடிய எல்லாக் காணிகளையும் நாங்கள் விடுவிப்போம்.”

– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணம்  மக்கள் வழங்கிய ஆதரக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முன்னைய காலங்களில் வடக்கில் மக்கள் தமிழ்க் கட்சிகளைத் தெரிவு செய்தார்கள். கிழக்கில் முஸ்லிம் கட்சிகளைத்  தெரிவு செய்தார்கள். தெற்கில் சிங்களக் கட்சிகளைத் தெரிவு செய்தார்கள். எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் பிரித்தாளப்பட்டனர். ஆனால், கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்தார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசானது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும்.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தேகத்துடன் இருந்தோம். ஒருவருக்கொருவர் பகைமையுடன் இருந்தோம். இறுதியில் போர் புரிந்தோம். உறவுகளை இழந்து அழிவு மட்டுமே ஏற்பட்டது. அந்த நிலைமை மீண்டும் வேண்டுமா? எங்கள் தலைமுறையோடு யுத்தம் முடிவடைந்துவிட்டது. எங்கள் பிள்ளைகள் அமைதியான சூழலில் வாழ்வதற்கான நாட்டை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்.

யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய கட்சிகளைப் புறக்கணித்து மக்கள் எங்களைத்  தெரிவு செய்தார்கள். எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்கமாட்டோம்.

யுத்த காலத்தில் மக்களின் காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகச்  சுவீகரிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறிக்கொண்டு இனியும் மக்களின் காணிகளை வைத்திருப்பதை நாம் விரும்பவில்லை. விடுவிக்கக் கூடிய எல்லாக் காணிகளையும் நாங்கள் விடுவிப்போம்.

முன்னைய ஆட்சியாளர்கள் பாதுகாப்புப் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்காது, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படலாம் அச்சத்தில் இருந்தார்கள். ஆனால், நாட்டில் இன்னும் ஒரு யுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் எங்கள் அரசு செயற்படவில்லை. நாங்கள் நாட்டில் இன்னொரு போர் உருவாகும் நிலையை தடுக்கும் வகையிலே செயற்பட்டு வருகின்றோம்.

இந்தப் பிரதேசங்களில் வீதிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதனைப்  படிப்படியாகத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதிகளை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைத்தோம். அந்தப் பாதைகளைத் திறக்க முடியுமாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதைகளை மூடிவைத்திருப்பது சரியானது அல்ல.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் வலிகளை நான் உணர்ந்திருக்கின்றேன். சாதாரணமாக ஒருவர் இறந்தால் அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்கின்றோம். சில நாட்கள் அவருக்காகக் கண்ணீர் சிந்துகின்றோம். பின் நாம் ஆறுதல் அடைகின்றோம். ஆனால், ஒருவர் காணாமல்போனால் அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது பெரும் வேதனையான விடயம். என்னுடைய சகோதரர் ஒருவரும் காணாமல்போயிருக்கின்றார்.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் வேதனையைப்  போக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அரசு என்ற வகையில் எமக்கு அந்தக் கடமை உள்ளது.

கடந்த ஆட்சியாளர்கள் நாட்டை முழுவதுமாகச் சீரழித்திருக்கின்றார்கள். நாங்கள் படிப்படியாக நாட்டைக் கட்டி எழுப்பி வருகின்றோம். தற்போது நாட்டுக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்திருக்கின்றோம். கட்டுநாயக்க விமான நிலையப் புனரமைப்பு உட்பட பல செயற்றிட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

இந்தியக் கடன் உதவியோடு ரயில் பாதை புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியப் பிரதமர் இலங்கை வந்தபோது அவருடன் கலந்துரையாடி அந்தக் கடனை அன்பளிப்பாக மாற்றியிருக்கின்றோம்.

நாட்டில் அஸ்வசும கொடுப்பனவு தகுதியான அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜூன் மாதத்திலிருந்து புதிதாக ஆறு இலட்சம் மக்களுக்கு அஸ்வசும கொடுப்பவை வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம்.

முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக்கொள்ளத்  தீர்மானித்துள்ளோம். அரச சேவையில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் போதியளவில் இல்லை. எனவே, குறிப்பிட்டளவினரைத் தமிழ் மொழி உத்தியோகத்தர்கள் நியமனத்திற்கு ஒதுக்கவுள்ளோம். பொலிஸ் சேவையிலும் தமிழ் மொழி உத்தியோகத்தர்களை நியமிக்கவுள்ளோம்.

காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை உள்ளது. எனக்கு ஜனாதிபதி மாளிகை தேவையில்லை. இந்தக் கட்டடத்தை மக்களின் நலன்களுக்காகப்  பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றோம்.

யாழ்ப்பாணம் நூலகம் அழிக்கப்பட்டது. இனவாதத்தின் உச்சக்கட்டமாக அது அமைந்தது. அதனைப் புனரமைக்க பத்து கோடி ரூபாவை  ஒதுங்கியிருக்கின்றோம். அது போல் வீதிகள் புனரமைப்புக்காகவும் பெருமளவான நிதியை ஒதுக்கியுள்ளோம்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு விசாலமான கட்டடம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கட்டடத்தை முழுமையாகப் பூர்த்தி செய்தபின் அதில் எவ்வாறான பணிகளை மேற்கொள்ளப் போகின்றோம் எனத் தெரியாமல் இருக்கின்றோம். அந்தளவுக்கு விசாலமானது. இந்த வருடத்திலிருந்து அதனை இயங்கவைக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் பல்வேறு சுற்றுலாத்தலங்களைக் கொண்டிருந்தாலும் தென்னிலங்கையோடு ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளுடைய எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய உள்ளூர் விமான சேவையைப் பலப்படுத்த வேண்டும்.

வடக்கு கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு சூழலும் மாசடைகின்றது. இந்தியப் பிரதமர் மோடியோடு அண்மையில் உரையாடும் போது மீனவர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு தேவை எனத்  தெரிவித்தேன். வடக்கு கடல் வடக்கு மக்களுக்குச் சொந்தமானது. கடலைப்  பாதுகாப்பதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

1983இல் இருந்து அதிகமான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றார்கள். அவர்கள் தற்போது பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள். உங்கள் சொந்த இடத்தைக் கட்டியெழுப்ப முதலீடு செய்யுங்கள். மீண்டும் இலங்கைக்குத் திரும்புங்கள். இந்த நாடு பாதுகாப்பானது. இங்கு இனவாதம் இல்லை. அனைவருடைய உரிமைகளும் பாதுகாக்கப்படும். பழைய கறுப்புப் பக்கங்களை மறந்துவிட்டு புதிய அத்தியாயத்தை எழுதுவோம்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மக்களின் பணத்தில் ஒரு சதத்தைக் கூட வீணடிக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை நான் தருகின்றேன். முன்னைய காலத்தில் ஊழல்களைச் செய்த பலர் மீது வழக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றோம்.

ஜனாதிபதியாகவும், நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையாகவும் தேசிய மக்கள் சக்தி காணப்படுகையில், மேல் மட்டத்தில் எடுக்கும் முடிவுகளை கிராம் மட்டத்தில் நிறைவேற்ற உள்ளூராட்சி மன்றங்கள் அவசியமானவை.

கடந்த அரசுகளிடம் போதியளவு நிதி இருக்கவில்லை. எங்களிடம் போதுமான நிதி இருக்கின்றது. அடுத்த வரவு – செலவுத் திட்டத்தைச்  சமர்ப்பிக்க இருக்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டால் அதற்குரிய நிதியை விடுவிக்கத் தயாராகவுள்ளோம். முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் யார் என்பதைப்  பார்த்தே நாங்கள் நிதியை ஒதுக்குவோம்.

உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சியிலிருந்தால் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிதியை ஒதுக்குவோம். ஏனெனில் இவர்கள் நிதியைக் களவாடமாட்டார்கள், வீண்விரயம் செய்யமாட்டார்கள். ஆனால், வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தால் நாங்கள் பலமுறை சிந்திக்க வேண்டும். எனவே, உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைத் தெரிவு செய்யுங்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளையும் வெற்றி கொள்வோம். புதிய அத்தியாயத்தை உருவாக்குவோம். எங்களுக்கு வாக்களிக்காமல் வேறு யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்? எங்களைவிட ஒரு நல்ல கட்சியைச் சொல்ல முடியுமா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். அந்த நம்பிக்கையைkகைவிடப் போகின்றீர்களா?

யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானத்தை அமைக்கவுள்ளோம். எங்கள் ஆட்சியில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் இணைந்து தேசிய கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய அணியைக் கட்டியெழுப்புவோம்.

மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறையில் கைத்தொழில் முதலீட்டு வலயங்களை அமைக்கவுள்ளோம். இதனால் பலருக்குத் தொழில் வாய்ப்பு அதிகரிக்கும். இனவாதத்தைத் தோற்கடித்து நாங்கள் ஒற்றுமையான நாட்டைக் கட்டியெழுப்புவோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More