வீட்டில் நின்ற டிப்பர் வாகனத்தைத் தந்தை செலுத்திய போது அதன் சில்லுக்குள் அகப்பட்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், வி. டர்சிகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
டிப்பர் வாகனத்தின் பின்புறம் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, அதனைக் கவனிக்காத தந்தை, டிப்பரைப் பின்னோக்கி நகர்த்தியுள்ளார். இதன்போது டிப்பர் சில்லுக்குள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் குழந்தையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.