“காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழிற்சங்கங்களைத் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை. அதேபோன்றே அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மைத் தமக்கான பொம்மைகளாகப் பயன்படுத்த முனைகின்றது.” – என்று வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அங்கு சம்மேளனத்தினர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், இம்முறை நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி ஆரியகுளம் சந்தி வழியாகச் சென்று, ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் ஊடாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாம் இம்முறை 12 தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றனர்.