“மறைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சமயத் தலைவராக இருந்தபோதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்து வந்த ஒருவர். அவர் ஆற்றிய பணிகளுக்காக என்றும் எம் மக்களால் நினைவுகூரப்படுவார்.”
– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இந்து சமயத்துக்காகப் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தமையறிந்து கவலையடைகின்றேன்.
இந்து சமயத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அவரை மிக நீண்டகாலமாக நான் அறிவேன். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனம் ஊடாக இந்து சமயத்தை வளர்ப்பதற்காகப் பல நிகழ்வுகளை நடத்தி வந்திருக்கின்றார். அவற்றுக்கு மேலாக சிறுவர்களிடத்தே இந்து சமயத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும், இந்து சமய அறநெறிகளைப் போதிக்கவும் பல விடயங்களை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது மிக முக்கியமானது.
இதற்கும் மேலதிகமாக, போர்க்காலத்திலும் சரி அதற்குப் பின்னரான காலங்களிலும் சரி, யாழ்ப்பாணத்தை நோக்கி வருகின்ற இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் என்று அவரைச் சந்திக்காமல் எவரும் செல்வதில்லை. எமது மக்களின் உண்மை நிலையை எடுத்துக்கூறுவதற்கு அவர் என்றும் பின்நின்றதில்லை. சமயத் தலைவராக இருந்தபோதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்துவந்த ஒருவர்.
அவர் ஆற்றிய பணிகளுக்காக என்றும் எம் மக்களால் நினைவுகூரப்படுவார்.
அவருக்கு வடக்கு மாகாண மக்கள் சார்பாக ஆத்ம வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.