5
“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். அரச சார்பு கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது.”
– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பான கேள்வி – பதிலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருடனான கேள்விகளும், பதில்களும் வருமாறு:-
01. கேள்வி :- நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்களா?
பதில் :- இல்லை. எனது கட்சியின் செயலாளர் நாயகமாகத் தொடர்ந்து பணிபுரிகின்றேன். ஆனால், இளைஞர் – யுவதிகளுக்கு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுத்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றேன். அண்மையில் நீதிமன்றங்கள் சென்றோம். அரசியல் ரீதியாக நடப்பனவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன்.
02. கேள்வி :- எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில் :- நம்பத்தகுந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து ஒரு சில முக்கிய உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவது பற்றியும் நேசக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது பற்றியும் நாம் சிந்தித்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். அரச சார்பு கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது.
03. கேள்வி :- இம்முறை அரச கட்சி (தேசிய மக்கள் சக்தி) சென்ற முறை போன்று வெற்றி பெறுமா?
பதில் :- எம் மக்கள் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேர்தல் மீதும் கரிசனை காட்டினால் அரச கட்சி தோல்வியுறும். ஆனால், தபால் வாக்குகள் அளித்த தொகையினரின் அளவுப் பிரமாணம் மனவருத்தத்தை அளிக்கின்றது. அரச பணியாளர்கள் பலர் வாக்களிக்கவில்லை என்று தெரிகின்றது. எமது மக்கள் தமது விரக்தியை தேர்தலில் காட்டினால் அது அரச கட்சிக்கு சார்பாக மாறிவிடும். சென்றமுறை ஒரு இலட்சத்திற்குக் குறைந்த தொகையினரே அரச கட்சிக்கு வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்களின் தொகை ஒரு இலட்சத்தைத் தாண்டியிருந்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இருந்த பிளவுகள் அரச கட்சிக்குச் சார்பாக அமைந்தது. இம்முறை எமது மக்கள் விரக்தியின் நிமித்தம் வாக்களிக்கச் செல்லாது விட்டால் மீண்டும் அது அரச கட்சிக்கே சார்பாக அமையும். அரச கட்சி இம்முறை வெற்றி பெறக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.
04. கேள்வி :- அரச கட்சியை ஏன் நீங்கள் வெறுக்கின்றீர்கள்?
பதில் :- நாம் வெறுக்கவில்லை. நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்து அரச கட்சிக்கு வாக்களித்தால் எமது தனித்துவம் அழிந்துவிடும் என்ற உண்மையை நாம் உணர்ந்ததால் மக்களுக்கு அதை வலியுறுத்தி வருகின்றோம். ஒருவன் மரங்களின் அழகில் மயங்கி அவற்றைப் பார்த்துக் கொண்டு வெகுதூரம் சென்றுவிட்டான். மிருகங்களின் உறுமல் சத்தங்கள் கேட்டதும் தான் அவன் காட்டிற்குள் நுழைந்ததை உணர்ந்தான். அப்பொழுதுதான் காட்டுக்குள் இருந்து வெளியேறுவது எவ்வளவு சிரமமானது என்பதை அவன் உணர்ந்தான். நாம் அரச கட்சியின் மேல்வாரியான சில நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் பக்கம் சார்ந்தோமானால் எதிர்காலத்தில் எதிர்வரும் சங்கடங்களைச் சமாளிக்க முடியாமல் போய்விடும். இதை மக்கள் உணர வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அத்திவாரமும் இதயமும் ஜே.வி.பியே என்பதை எம் மக்கள் மறக்கக்கூடாது. வடக்கு – கிழக்கின் இணைப்பை இல்லாதாக்கிய அதே ஜே.வி.பி.தான்.
05. கேள்வி :- அப்படி என்ன பாதிப்பான நடவடிக்கைகளில் அரச கட்சி ஈடுபட்டு வருகின்றது?
பதில் :- அண்மையில் அரச கட்சி பேச்சாளர் ஒருவர் தமது கட்சியே இனி என்றென்றும் ஆளவிருக்கின்றது, அநுரகுமாரவுக்கு மிஞ்சிய நல்லவர் ஒருவர் இருந்தால் மட்டுமே அவருக்கு வாக்களிக்கலாம், ஆனால், அப்படி எவருமே புலப்படவில்லை என்று கூறினார். இதன் அர்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை காலமும் நடந்து வந்த ஜனநாயகத் தேர்தல்களை நாம் இனி எவ்வளவு காலத்திற்கு எதிர்பார்க்க முடியுமோ தெரியாது. ஜே.வி.பி. பதவியில் இருந்து இறங்காது. எவர் வந்தாலும் ஒரு கட்சியே ஆளும். அந்தக் கட்சியில் உள்ளவர்களில் நல்லவரை மக்கள் தேர்ந்தெடுக்கலாம் என்பதே ரஷ்யா, சீனா, கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் இருக்கும் தேர்தல் முறை. படிப்படியாக அவ்வாறான ஒரு நிலை இங்கும் வர இருக்கின்றது என்பதை மக்கள் உணர வேண்டும். இலஞ்ச, ஊழல்வாதிகளை நீதிமன்றின் முன் நிறுத்த இருக்கின்றார்கள் என்பதை வைத்து வரப்போகும் மற்றைய விடயங்களை சிந்தியாது இருப்பது முட்டாள்தனம். திருடர்களையும் இலஞ்ச, ஊழல்வாதிகளையும் பிடிக்க அரசுக்கு எமது மக்கள் ஆதரவு வழங்குவது அவசியம். ஆனால், அரச கட்சியின் பின்னணி, சிந்தனை, அரசியல் தத்துவம், வரலாறு போன்றவற்றை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகளில் எவையெவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை மக்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டும். திணைக்களங்கள் மக்கள் காணிகளைச் சூறையாடுவது நின்றுவிட்டதா அல்லது தொடர்கின்றதா என்பது பற்றி எம்மவர் ஆராய வேண்டும். முல்லைத்தீவில் அரச படையினர் தொகை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை எம்மவர் ஆராய்ந்து விடை காண வேண்டும். அங்கு பொது மக்கள் 2 அல்லது 3 பேருக்கு ஒரு படைவீரன் என்ற முறையிலேயே அரச படை இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மக்களை பௌத்தர்களாக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்பதை எம்மவர் ஆராய வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் நின்றுவிட்டனவா, தொடர்கின்றனவா என்பதை எம் மக்கள் ஆராய வேண்டும். உள்ளூர் இடங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டும் பழக்கம் தொடர்கின்றதா, கைவிடப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆராய்ந்து எம்மவர் அறிந்து கொள்ள வேண்டும். திணைக்களங்களுக்கு தனிச் சிங்களத்தில் கடிதங்கள் இன்றும் வருகின்றனவா இல்லையா என்பதை மக்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். முன்னைய தேர்தல்களின் போது அரச கட்சி தமிழ் மக்களுக்கு வழங்குவதாகக் கூறியவை வழங்கப்பட்டுள்ளனவா என்றும் ஆராய்ந்து தீர்ப்பெடுக்க வேண்டும்.
06. கேள்வி :- அரச கட்சி இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில ; பல உள்ளூராட்சி மன்றங்களைக் கையேற்கும் என்றிருக்கின்றார்கள் அரச தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் :- உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அந்தந்த வட்டாரங்களில், பிரதேசங்களில் வசிப்பவர்கள் வாக்களிக்கின்றார்கள். இந்த அரசு அந்தந்தப் பிரதேசங்களில் ஏதேனும் உதவிகளை இதுவரையில் செய்தார்களா என்று பார்த்தால் எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை. மக்கள் எவ்வாறு அரச கட்சிக்கு வாக்களிப்பார்கள்? அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களா? ஒரு பக்கத்தில் காணிகளை விடுவிப்பதாகக் கூறி வேறொரு பக்கத்தில் அரச திணைக்களங்களை கொண்டு தமிழர்களின் பாரம்பரிய காணிகளைக் கையேற்கும் மர்மம் பற்றி எம் மக்கள் தெரியாமல்த் தான் இருக்கின்றார்களா? மக்களுக்குத் தெரியும். இதுவரை எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்ட பிழைகள், அரச கட்சி இந்தக் குறுகிய காலத்தினுள் நடைமுறைப்படுத்தாது விட்ட தேர்தல் வாக்குறுதிகள் பற்றி எல்லாம் அவர்களுக்குத் தெரியும். இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலின் பின்னர் நாம் வடக்கு, கிழக்கில் இணைந்தே நிர்வாகத்தை வழி நடத்துவோம். அரச கட்சிக்கு இனி இங்கு இடமிருக்காது.