தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான வேதிகா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கஜானா’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் தயாரிப்பாளர் மதியழகன் , நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
அறிமுக இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ கஜானா’. இதில் இனிகோ பிரபாகர், வேதிகா, யோகி பாபு, சாந்தினி தமிழரசன், ‘நான் கடவுள் ‘ராஜேந்திரன் , பிரதாப் போத்தன், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி துரைசாமி மற்றும் ஜே. பி. வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜா மணி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ‘கஜானா’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக நடைபெற்ற பிரத்யேக விழாவில் பங்கு பற்றி படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” மித்தலாஜிக்கல் கொன்செப்ட்டை ஃபேண்டஸியோடு சொல்லி இருக்கிறோம். இதில் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது.
இதற்காகத்தான் படக் குழுவினர் கடுமையாக உழைத்தனர். இந்தத் திரைப்படம் கோடை விடுமுறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் ஃபேண்டஸியான படமாக இருக்கும். அத்துடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தையும் வழங்கும்” என்றார்.