நாளை உள்ளுராட்சித் தேர்தல். பெரும்பாலும் நாளை இரவே முடிவுகள் தெரிந்து விடும். அதோடு முதற்கட்டப் பதட்டம் குறைந்து விடும். ஆனாலும் தனிப் பெரும்பான்மையைப் பெறமுடியாத சபைகளில் ஆட்சி அமையும் வரை இன்னொரு பதட்டம் – இரண்டாம் கட்டப் பதட்டம் தொடரும்.
அதற்கு முன், சபைகளை யார் கைப்பற்றுவார்கள்? எந்தத் தரப்பினருக்கு வெற்றி கிட்டும்? சபைகளைக் கைப்பற்றக் கூடியவாறு முடிவுகள் அமையவில்லை என்றால், யார் யாருடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள்? அதாவது தேர்தலுக்காக திடீர் அரசியற் கூட்டுகள் உருவாகியதைப்போல, ஆட்சியை அமைப்பதற்காக இந்த அரசியற் கூட்டுகள் உருவாகும். இதுவும் ஒரு அரசியற் சுவாரசியமாகவே இருக்கும்.
அப்படியென்றால், அந்த ஆட்சிகள் எப்படியாக அமையும்? ஆட்சியிலிருக்கும் NPP க்கு இந்தத் தேர்தல் எத்தகைய சேதியைச் சொல்லப்போகிறது? எதிர்க்கட்சிகளின் எதிர்காலப் பலனும் சமகால நிலையும் எப்படியாக உள்ளது? பிராந்திய சக்திகளான தமிழ், முஸ்லிம், மலைகக் கட்சிகளின் கட்சிகளின் நிலை என்ன? அவற்றின் அரசியல் எப்படியாக உள்ளது? சனங்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் நாளையும் அடுத்த வாரத்திலும் முழுதாக அறியக் கூடியதாக இருக்கும்.
உள்ளுராட்சித் தேர்தற் பரப்புரைகளில் ஆளுந்தரப்பினர் (NPP) தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆளும்தரப்பு என்ற வகையில் அதற்கான உற்சாகமும் வாய்ப்புகளும் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. முழு இலங்கையிலும் தமது செல்வாக்கை – அதிகாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே NPP யின் நோக்கமும் விருப்பமும். அதிலும் வடக்குக் கிழக்கு, மலையகம் என்ற பிராந்திய அரசியல் வலுவாக இருக்கும் தளத்தில் தாம் வெற்றியடைய வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி குறியாக இருக்கிறது . ஓரளவுக்குக் காற்றும் அவர்களுக்குச் சாதமாகவே வீசுகிறது. அதாவது NPP யின் அலை இன்னும் பலமாகத்தானிருக்கிறது. காலி முகத்திடலில் நடந்த NPP யின் மேதினக் கூட்டம் இதற்கொரு சான்று.
சனங்களைத் திரட்டியே மே தினக் கூட்டத்தை நடத்தியது தேசிய மக்கள் சக்தி என்று சிலரால் சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், அதற்கப்பாலும் தேசிய மக்கள் சக்தியின் மீதான அலை இன்னும் தணியவில்லை என்றே சொல்ல வேண்டும். என்றபடியால்தான் தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தொடக்கம் தென்னிலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேர்தற் பரப்புரையில் NPP யை வலுவாக எதிர்க்க வேண்டியிருந்தது.
நாட்டில் முதற்தடவையாக அனைத்துத் தரப்புக்கும் ஒரே எதிர்த்தரப்பாக இருப்பது NPP தான். அப்படியென்றால், NPP வலுவாக இருக்கிறது என்றுதானே அர்த்தமாகும்!
வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியவாதச் சக்திகள் மூன்று அணிகளாக உள்ளன. ஒன்று, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், சமத்துவக் கட்சி, ரெலோ, ஜனநாயகப் போராளிகள் என ஐந்து கட்சிகளின் கூட்டான ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இரண்டாவது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தலைமையாகக் கொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். மூன்றாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சி. தேர்தலில் இவை தனித்தனியாகவே நிற்கின்றன. தனித்தனியாக நின்றாலும் தேசிய மக்கள் சக்தியே இவற்றுக்கான பொது எதிரியாகும். மட்டுமல்ல, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்றவற்றுக்கும் NPP யே பொது எதிரி.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இவை அரசாங்கத் தரப்புடன் – NPP யுடன் – கூட்டுச் சேர்ந்துதான் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் (நிலைமை) வந்தால் என்ன நடக்கும்? அல்லது, இந்தக் கட்சிகளுக்குள்ளேயே கூட்டுச் சேர்ந்தால்தான் ஆட்சியை அமைக்க முடியும் என்றால் அந்தக் கூட்டு எவ்வாறிருக்கும்?
சிலவேளை ஒரு சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு கூட்டு வைக்க வேண்டி வந்தால்…! அதைப்போல ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியோடுதான் கூட்டு வைக்க வேண்டும் என்றால்…? இதில் தேவன் யார்? சாத்தான் யார்? தேவனும் சாத்தானும் சேர்ந்து ஆட்சி நடத்த முடியுமா? அல்லது “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று திருவாளர் கவுண்டமணி ஸ்ரைலில் சொல்லிச் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானா? அல்லது “அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. சூழ்நிலையே எதையும் தீர்மானிப்பது” என்று அறிவுபூர்வமாக நியாயப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்குமா?
அப்படித்தான் நாடு முழுவதிலும். எல்லாக் கட்சிகளும் எல்லா அணிகளும் பிரிந்து நின்றாலும் அவை எல்லாம், NPP க்கு எதிரானவை என்ற வகையில் தமக்கிடையில் ஒரு உடன்படிக்கையை – இணக்கத்தைக் கொள்ள வேண்டியிருக்கும். தேர்தலுக்கு முன் எதிரெதிர்த்தரப்பாக அல்லது உடன்படாத் தரப்புகளாக இருந்த – இருக்கின்ற – ஐ.தே.கவும் ஐக்கிய மக்கள் சக்தியும் (ரணிலும் சஜித்தும்) கூடக் கைகோர்க்க்க் கூடிய சூழல் உருவாகலாம். இவ்வாறான அதிசயச் சூழலில் மாற்றம் ஒன்றைத் தவிர மற்ற ஒன்றுமே நிரந்தரமில்லை என்ற மாக்ஸிஸத் தத்துவத்தைச் சொல்லிக் கொண்டு எல்லோரும் ஆறுதடைய வேண்டியதுதான்.
ஆகவே, தேர்தலுக்கு முன்பு, தேர்தலின்போது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகும் அரசியற் சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது. ஊடகங்களுக்கும் சனங்களுக்கும் நல்ல தீனி கிடைக்கும். அதில் முக்கியமானது. ஆட்சியை அமைப்பதற்கான கூட்டு என்பது பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட அரசியற் பேரமாகவே அமையும். தேர்தற்காலக் கூட்டுருவாக்கத்தில் பேரத்துக்கு அதிக வலுவில்லை. இங்கே அப்படியிருக்காது. இது வெற்றிபெற்றவர்கள் – சபைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அமைக்கப்படுகின்ற அரசியற் கூட்டு – அதிகாரக் கூட்டு – என்பதால், இங்கே பேரத்துக்கு வலு அதிகம். இந்தப் பேரங்கள் பின்வருமாறு அமையலாம்.
1. சபைகளில் தலைமைப் பொறுப்பு, அதற்கு அடுத்த நிலையில் உள்ள பொறுப்புகள் குறித்த பகிர்வை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக மாநகரசபைகளாயின் முதல்வர் (மேஜர்) பிரதேச சபைகளாயின் தவிசாளர் பதவிக்கான பேரம். அல்லது துணை முதல்வர், உப தவிசாளர் நிலைக்கான பேரம்.
2. சபைகளில் அமையவுள்ள துறைசார் குழுத்தலைவர்களுக்கான பேரம்.
3. சபைகளில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளில் தமக்கான ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவற்றை நிபந்தனையாக வைக்கும் பேரம்.
4. அரசியற் தீர்மானங்களில் உடன்படவேண்டிய – எதிர்க்க வேண்டியவை என்ற நிபந்தனைகள் பற்றிய பேரம்.
இதையும் விட இன்னும் பலவிதங்களில் இந்தப் பேரங்கள் அமையக் கூடும். அரசியற் கட்சிகளின் தலைக்குள்ளும் மனதுக்குள்ளும் என்னவெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் பேர மேசையில் இறங்கி விளையாடும்.
இதெல்லாம் சனங்களின் தேவைகள், நியாயங்களுக்கு வெளியேதான் அநேகமாக நடக்கும். முக்கியமாக ஒவ்வொரு கட்சியும் தனது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே இந்தப் பேரங்களில் விளையாடப்பார்க்கும்; செல்வாக்கை – ஆதிக்கத்தைச் செலுத்தும்.
இதற்குள் சனங்களுக்குச் சில நன்மைகள் கிடைக்கலாம். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதைப்போல. இங்கே நெல் கட்சிகளாகும். புல், சனங்கள்.
ஆனால், மக்கள் என்ற நெல்லை நோக்கியே நீர் பாய்ச்சப்பட வேண்டும். அதுவே அரசியல் கோட்பாடாகவும் நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும். அப்படிச் சிந்திக்க்க் கூடிய உயர்ந்த உள்ளம் – தங்கமான மனது யாருக்குத்தான் – எந்தக் கட்சிக்குத்தான் உண்டு?
என்பதால் சனங்கள் தங்களுடைய வரலாற்றுக் கடமையை நாளை நிறைவேற்றி விடுவார்கள். வாக்களிப்புக்கு இன்னும் ஒரு நாள் கூட இல்லை. சில மணி நேரமே உண்டு. சனங்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்குப் பத்துத் தடவை நிதானமாகவும் நியாயமாகவும் சிந்தித்து வாக்களிப்பைச் செய்ய வேண்டும். எழுந்தமானாமாக – யாரோ சொல்கிறார்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள், உறவினர்கள் எடுக்கின்ற தீர்மானத்தை நாமும் எடுப்போம் என்று வாக்களித்தால், அதன் விளைவுகளை மக்களே அனுபவிக்க வேண்டும். தவறான வாக்களிப்புகளில் தவறான சக்திகள் தெரிவு செய்யப்படுவது மட்டுமல்ல, தவறான முறையிலான பேரங்களும் அமைந்து விடும்.
தேர்தல் என்பது பொறுப்பற்றதனமாக விளையாடுவதற்காக வரும் ஒன்றல்ல. நாட்டின் நிதியில் பெருந்தொகை பணத்தையும் வளத்தையும் செலவழித்து மேற்கொள்ளப்படுகின்ற ஜனநாயக நடவடிக்கையாகும். மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையையும் அதிகாரத்துக்கான வழியையும் உருவாக்குகின்ற ஒரு வாய்ப்பும் ஏற்பாடும் இது. ஆகவேதான் தேர்தலை மக்களுக்கான வரங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவதுண்டு. அந்த வரத்தை நாசம் செய்யக் கூடாது.
நாளை நல்ல தீர்மானத்தோடு பொழுது புலரட்டும். நாளை மறுதினம் அந்தத் தீர்மானம் சபை ஏறட்டும்.