“தமிழ்த் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக – தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் மக்கள் பலத்துடன் தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம்.”
– இவ்வாறு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நடைபெற்ற தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
“தமிழின அழிப்பு, வரலாற்று செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சிங்கள – பௌத்த பேரினவாதம் இந்தத் தீவின் சக தேசமான தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றி கொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் காரணமாக தமிழ்த் தேசம் படிப்படியாக அழிந்து வருகின்றது.
இன அழிப்பு எதார்த்தத்தின் விளைவாக எமது இருப்பைப் பாதுகாப்பதற்கும், உரிமைகளைப் பெறுவதற்குமாக எழுந்த அசாத்தியமானதும், ஈகங்கள் நிறைந்ததுமான உரிமைப் போராட்டத்தினதும் விடியலுக்காக ஒரு தேசமாக நாங்கள் அணி திரண்டு நின்றதற்கானதுமான அடையாளமாகவும் உள்ள முள்ளிவாய்க்காலையும் நாம் இன்று நினைவு கூருகின்றோம்.
தமிழின அழிப்பில் பிரித்தானிய காலனித்துவத்தின் வகிபங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிரித்தானிய காலனித்துவத்திடம் பரிசாகக் கிடைத்த ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை, தமிழின அழிப்புக்கான ஒரு கருவியாக சிங்கள – பெளத்த பேரினவாதம் இலங்கை சுதந்திரத்தின் பின்னான அரசியல் வரலாற்றில் பயன்படுத்தியது.
2009 இற்கு முன்னர் தமிழர் தாயகத்தை அபகரிக்கரிப்பதற்கு இராணுவ வன்வலுவைப் பயன்படுத்திய – கொழும்பு அதிகார மையத்தை கையகப்படுத்திய அரசுகள், 2009 இற்குப் பின்னர், பௌத்த மதத்தையும் அபிவிருத்தியையும் மென் வலுவாகப் பயன்படுத்தி தமிழர் மீதான அடக்குமுறையையும் , தமிழரின் பூர்வீகத் தாயகப் பரப்பான வடக்கு – கிழக்கையும் தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்புக்கு ஊடாக அபகரித்து வருவதும் தமிழர் தாயகத்தை சிங்கள – பௌத்த மயமாக்குவதும் எம் கண்முன்னே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
21ஆம் நூற்றாண்டில் ஏக துருவ உலக ஒழுங்குக்கான போட்டி பலமுனைகளில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்கும்போது, ஏக துருவ பேரரசு கட்டமைப்பு, தனது புவிசார் நலன்களுக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவுள்ளதை, அன்று முள்ளிவாய்க்காலும், இன்று பலஸ்தீனமும் வெளிக்கொண்டு வருகின்றன.
தற்போது அதிகாரத்திலுள்ள அரசு, தமிழினத்தின் நில மீட்பை மையப்படுத்திய விடுதலைப் போராட்டத்தை, இனவாதமாகச் சித்திகரிக்க முயற்சிக்கின்றது. இனவாதமாகச் சித்தரிப்பதன் மூலம் அதை உள்ளூர் பிரச்சினையாகச் சோடித்து, ஈழத்து தமிழர்களின் தேசத்துக்கான அரசியல் வேணவாவையும், அரசியல் அறக் கோரிக்கைகளையும் இல்லாதொழித்து, இலங்கையைச் சிங்கள – பௌத்த ஏக அடையாளத்துடன் கட்டமைக்க முனைவது, இந்தத் தீவின் பல்லினத் தன்மையைச் சாகடிப்பதாகும்.
தமிழின அழிப்பு குற்றத்தை மலினப்படுத்துகின்ற செயன்முறையில் ஈடுபடும் தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல, அவை தமிழின விடுதலைப் போராட்டத்தின் திசையை மாற்றுவதோடு, இலங்கை அரசுக்கும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கும் விலை போனதாக வரலாறு அவர்களை நினைவு கொள்ளும்.
தற்போது ஆட்சி அமைத்த அநுர அரசு, தமிழினத்தின் கூட்டு அரசியல் வேணாவை புறந்தள்ளி வருவதோடல்லாமல், தமிழ்த் தேசியத்தின் விழுமியங்கள் மீதான நம்பிக்கையையும் உடைத்து வருகின்றது.
அதை ஒரு போர் முறையாக முன்னெடுக்கின்றது. தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்களை தற்போதைய உலக ஒழுங்குக்குப் பொருத்தப்பாடற்றதாகக் கட்டமைத்து, தமிழினத்தின் கூட்டு அரசியல் நம்பிக்கை மீதான உளவியல் போரை கட்டவிழ்த்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழின அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்மினத்தின் எழுச்சியைச் சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காகத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசு கட்டமைப்பின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட அணிதிரள்வதைத் தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்படவில்லை.” – என்றுள்ளது.