கல்கிஸையில் சில்வெஸ்டர் வீதிக்கு அருகிலுள்ள சந்தியில் 19 வயது இளைஞர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மற்றும் குற்றச் செயலுக்கு ஒத்தாசையாக இருந்தவர் என இரண்டு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான பிரதான துப்பாகிதாரியிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, பதினைந்து 9 மி.மீ. தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கொட்டாவ விஹார மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை விமானப்படையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். அவர் அங்கு ஒன்றரை ஆண்டுகள் சேவையில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடி வந்துள்ளார்.
கொட்டாவை, மாம்புல்கொடை பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் வீட்டின் பின்புறத்தில் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளின் பாகங்கள், இரண்டு போலி இலக்கத் தகடுகள் புதைக்கப்பட்டிருந்தன.
கடந்த 10 ஆம் திகதி குற்றச் செயலுக்கு உதவிய மற்றும் ஒத்தாசையாக இருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் தற்போது நாட்டிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கல்கிஸைப் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று தெஹிவளை – கல்கிஸை நகர சபை திண்மக்கழிவு முகாமைத்து பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தெஹிவளை, ஆபர்ன் பிளேஸைச் சேர்ந்த 19 வயது பிரவீன் நிசங்க என்ற இளைஞரைச் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸைப் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்ட நபரைத் துரத்திச் சென்று, பின்னர் அருகில் இருந்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. பிரதான வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தேறியிருந்தது.
கொல்லப்பட்டவர் தற்போது விளக்கமறியலிலுள்ள தெஹிவளை சத்துரி என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட பெண்ணின் மகன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது மகளும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.