கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்தையடுத்து வெடித்த இன மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் 17வது நாளாக நீடிக்கும் நிலையில், காலனி ஆதிக்கம் மற்றும் அடிமை ஆதிக்க மனோபாவத்தின் சின்னங்களாக கருதப்படும் சிலைகள் பல நாடுகளில் தகர்க்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் மின்னியாபொலீஸ் நகரத்தில் போலீஸ் தாக்கியதில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டு மரணமடைந்ததையடுத்து இனபாகுபாடு மற்றும் போலீசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சியாட்டில் நகரத்தில் மேயர் ஜென்னி துர்கனை பதவி விலக வலியுறுத்தியும் போலீஸ் சீர்த்திருத்தத்தை கோரியும் சிட்டி ஹாலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
பிரான்சில் எதிராளியின் கழுத்தை கைகளால் இறுக்கும் சோக்ஹோல்ட் கைது நடவடிக்கைக்கு தடை விதித்ததைக் கண்டித்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை போலீசார் அதிகாரி கால் முட்டியால் மிதித்ததில் உயிரிழந்ததையடுத்து காவல் பள்ளிகளில் சோக்ஹோல்ட் கைது கற்பிக்கப்படாது என்றும் எதிராளியை தரையில் தள்ளி கழுத்தில் அழுத்தம் கொடுப்பது தடை செய்யப்படும் என்றும் பிரான்ஸ் அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசார் அணிவகுத்துச் சென்றனர்.
லண்டனில் இனபாகுபாடுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்ததால் நினைவுச் சிலைகளை சுற்றி தடுப்புகள் வைத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை, வைட்ஹாலில் உள்ள கல்லறை உள்ளிட்டவற்றிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் கடற்படை கேப்டனின் சிலை அகற்றப்பட்டது. கேப்டன் ஜான் ஃபேன் சார்லஸ் ஹாமில்டன் 1864 இல் மாவோரிக்கு எதிரான கேட் பா போரில் ஒரு படைப்பிரிவை வழிநடத்தியவர். சர்ச்சைக்குரிய இவரின் சிலையை அகற்றப்போவதாக இனபாகுபாடுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சிலையை அதிகாரிகளே அகற்றினர்.