அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கருப்பின இளைஞர் மீது ரோந்து பொலிசார் சரமாரியாக சுட்டத்தில் இளைஞரின் இடுப்புக்கு கீழே செயலற்றுப்போன சம்பவத்தில் மாகாண ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் இடுப்புக்கு கீழே செயற்றுப்போன அந்த கருப்பின இளைஞருக்கு இழப்பீடாக தற்போது 6 மில்லியன் டொலர் தொகையை அனுமதித்து மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டிலேயே கருப்பின இளைஞரான டோன்ட்ரெல் ஸ்டீபன்ஸ் என்பவர் படுகாயமடைந்தார்.
அதன் பின்னர் சக்கர நாற்காலியில் காலத்தை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதுபோன்ற வழக்குகளில் அதிகபட்சமாக 200,000 டொலர் இழப்பீடு வழங்குவதே சட்டமாக அமுலில் இருந்துவரும் நிலையில்,
நாட்டில் நடந்தேறும் கருப்பின ஆதரவு நிலையை கருத்தில் கொண்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்தே டோன்ட்ரெல் ஸ்டீபன்ஸ் வழக்கில் அவருக்கு 6 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கை முன்னெடுத்த விசாரணை குழு, சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியிடம் இழப்பீடாக 22 மில்லியன் டொலர் வழங்க கோரிக்கை முன்வைத்தது.
ஆனால் அந்த கோரிக்கையை அவர் நிராகரித்த நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் 4.5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க அந்த அதிகாரி ஒப்புக்கொண்டார்.
தற்போது மாகாண அரசாங்கம் மேலும் 6 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இதில் 3.4 மில்லியன் பாதிக்கப்பட்ட இளைஞருக்கும்,
2.5 மில்லியன் டொலர் மருத்துவ செலவிற்கும், 1.1 மில்லியன் டொலர் வழக்கறிஞர்களுக்கான ஊதியமாகவும் அளிக்கப்படும்.
2013 ஆம் ஆண்டு பரபரப்பான சாலை வழியாக அப்போது 20 வயதான டோன்ட்ரெல் ஸ்டீபன்ஸ் தமது மிதிவண்டியில் விரைந்து சென்றுள்ளார்.
இதை கவனித்த ரோந்து பொலிசார், இளைஞர் டோன்ட்ரெல் ஸ்டீபன்சை மடக்கிப் பிடித்தனர்.
ஆனால் பொலிஸ் வாகனம் அருகே நடந்து வந்த டோன்ட்ரெல் ஸ்டீபன்ஸ் கையில் மொபைல்போன் இருந்ததை துப்பாக்கி என தவறாக கருதிய பொலிசார், இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த டோன்ட்ரெல் ஸ்டீபன்ஸ் அதன் பின்னர் சக்கர நாற்காலியிலேயே நடமாடி வருகிறார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அந்த வெள்ளை பொலிஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது