கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, ஈரான் அரசு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சுலைமானியையும், அவருடன் இருந்தவர்களையும் துல்லிய தாக்குதல் மூலம் கொல்ல டிரம்ப் உத்தரவிட்டதாக டிரம்ப் மீதும் மேலும் 30 பேர் மீதும் கொலை மற்றும் தீவிரவாத குற்றங்களை ஈரான் சுமத்தியுள்ளது.கைது வாரண்டை பிறப்பித்துள்ள ஈரான், டிரம்பை பிடிக்க உதவுமாறு இன்டர்போலுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், ஈரானின் கைது வாரண்ட் நடவடிக்கை அதை மேலும் சீர்குலையச் செய்யும் என கூறப்படுகிறது.