ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேலும் 2 முறை அதிபர் பதவியில் நீடிப்பதற்கு வழிவகை செய்யும், அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.
அந்நாட்டில் அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்ற சட்டத்தில், ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்பு கடந்த 25ம் தேதியன்று தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இந்த தேர்தலின் முடிவில் பதிவான மொத்த வாக்குகளில் 72 சதவீத வாக்குகள், சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், 2036ம் ஆண்டு வரையில் விளாடிமிர் புதின் ரஷ்யவின் அதிபராக நீடிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதேசமயம் இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக எதிர்க்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.